தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். ஆய்வில் அவர் ரூபாய் 90 கோடி செலவில் நடைபெறப் போகும் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். அதற்கான வரைபடங்களை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். பின்பு ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,” ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் துவங்கும். இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது. ஒப்பந்ததாரர் வரைபடங்களை மேம்படுத்தும் பணி ஈடுபட்டிருக்கிறார். ராமேஸ்வரம் போன்ற பெரிய சுற்றுலா தலத்தில் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுக்கு தனித்தனி முனையங்கள் அமைய இருக்கிறது. விசாலமான வாகன நிறுத்தும் இடங்கள், இரண்டு மாடி ரயில்நிலைய கட்டிடத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் ஆகியவை அமைய இருக்கின்றன. புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும். ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில் பாதை காண நில ஆர்ஜித பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையான நிலம் கிடைத்தவுடன் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட இருக்கிறது. ராமேஸ்வரம் வரையிலான மின்மயமாக்கல் பணிகள் உச்சிப்புளி இந்திய கடற்படை விமான தள விரிவாக்கத்திற்கான ரயில் பாதை மாற்றத்திற்கு பிறகு துவங்கும்" என்றார்.
அவருடன் ஆய்வில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் ஜிங்கர், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் திட்ட அதிகாரி கமலாகர ரெட்டி, முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி, துணை முதன்மை பொறியாளர் ரதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமேலாளர் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை அமையும் தனுஷ்கோடி பகுதியில் உள்ள 1964ல் புயலில் சேதமடைந்த ரயில் நிலையப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்பு தற்போது பயன்பாட்டில் இருக்கும் பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்தார். பின்பு புதிய பாம்பன் ரயில் பால கட்டுமானம் சம்பந்தமாக ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இறுதியாக ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக திருச்சி வரை சிறப்பு ரயில் மூலம் ரயில் பாதையை ஆய்வு செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்