ஆரோவில் கிரவுண் திட்டத்திற்காக மரங்களை வெட்ட இடைக்கால தடை

மரங்களை வெட்டுவதற்கு 17.12.2021 வரை இடைக்காலத் தடை விதித்தும் ஆரோவில் பன்னாட்டு நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் அனைவரும் பதிலளிக்க உத்தரவு

Continues below advertisement

புதுச்சேரியை அடுத்த ஆரோவில் சர்வதேச நகரம் தமிழக பகுதியான  விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவுக்கு உட்பட்டது ஆகும். கடந்த 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த நகரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது 50 ஆயிரம் பேர் வசிக்க கூடிய வகையில் திட்டமிட்டு கட்டுமான பணிகள் நடந்தன. தற்போது சுமார் 3,500 பேர் வரை மட்டுமே வசித்து வருகிறார்கள். இவர்கள் பிரான்ஸ், அமெரிக்கா, ரஷியா உள்பட 52 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இங்கு அன்னையின் கனவு திட்டத்தின் கீழ் கிரவுன் சாலை அமைப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன.

Continues below advertisement

ஆரோவில் சர்வதேச நகரில் இருதரப்பினர் இடையே மோதல் - சாலை பணிகள் தடுத்து நிறுத்தம்

இதற்கு ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரோவில்லில் அமைதி கூட்டம் நடைபெற்றது. அப்போது வளர்ச்சி பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலைகள் விரிவாக்க பணி தொடங்கியது. இதை அறிந்து ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் திடீரென்று பணிகளை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். பொக்லைன் எந்திரங்களை மறித்து நடுரோட்டில் அமர்ந்து திடீரென பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து இன்னொரு தரப்பினர் சாலை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக நவ்ரோஸ் மோடி என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் ஆரோவில்லில் அமைந்திருக்கும் மரங்கள் அனைத்தும் கோதவர்மன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ‘காடு’ என்கிற வரையறைக்குள் வருவதால் காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் மரங்களை வெட்டவும் சாலை அமைக்கவும் உரிய அனுமதியை ஆரோவில் நிர்வாகம் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும் இத்திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க ஆரோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும்  நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு ஆரோவில்லில் சாலை அமைக்கும் பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு வனத்துறையின் முன் அனுமதி அவசியம் என்கிற மனுதாரரின் வாதத்தில் முகாந்திரம் இருப்பதால், இப்பிரச்சனையின் அவசரம் மற்றும் முக்கியத்துவம் கருதி  தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010ன் உத்தரவு 39, விதி 1 மற்றும் பிரிவு 19(4)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர் மனுதாரரின் வாதத்தைக் கேட்பதற்கு முன்பாகவே மரங்களை வெட்டுவதற்கு 17.12.2021 வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆரோவில் பன்னாட்டு நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசமபர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola