ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்காக ப்ரத்யேக கொரோனா சிகிச்சை படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது . இதன் காரணமாக கடந்த 24  மணிநேரத்தில் வேலூர் மாவட்டத்தில் 297  நபர்கள் புதிதாக கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கபட்டு, 3114  நபர்கள் கொரோனா நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர் . வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தீவிரத்தால் 17  நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதேபோல் திருப்பத்தூர்  மாவட்டத்தில் 327 புதிய நபர்களும்  ராணிப்பேட்டை மாவட்டத்தில் 318  புதிய நபர்களும் கடந்த 24  மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .




கொரோனா நோயின் தாக்கம் தற்பொழுது மெல்ல  கர்ப்பிணி தாய்மார்களை குறிவைக்க தொடங்கியதை அடுத்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து நம்மிடம் விவரித்த  சுகாதார துறை அதிகாரிகள், கொரோனா இரண்டாம் அலை தீவிரம் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. கர்ப்பிணி தாய்மார்களை கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அவர்களது  மாதாந்திர பொது பரிசோதனை மற்றும் அவர்களுக்கான சிகிச்சைகள் அனைத்தும் கிராமிய மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது .


இப்படியான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளபோதும் , சுகாதார மையங்களுக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இங்கே கொரோனா பரிசோதனை நடத்தும் பொழுது சிலருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்படுகின்றது . அப்படி உறுதி செய்யப்படும் தாய்மார்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது. இதனை தடுக்கும்பொருட்டு ஒருங்கிணைந்த வேலூர்  மாவட்டத்தில் மொத்தம் உள்ள 20 அரசு சுகாதார மையங்களிலும் , ஒரு சுகாதார மையத்திற்கு 10 படுக்கைகள் என்ற கணக்கில், வேலூர் மட்டும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தலா 7  சுகாதார மையங்களில் 140  படுக்கைகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6  சுகாதார மையங்களில் 60 படுக்கைகள் என மொத்தம் 200 படுக்கைகள் கர்ப்பிணி தாய்மார்களுக்காக ஒதுக்க பட்டுள்ளது  . 


தற்பொழுது கொரோனா நோய் தொற்றானது படிப்படியாக குறைந்து வருகிறது என்றும், விரைவில் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து அனைத்து நோயாளிகளும் குணமடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா நோய்க்கு போதுமான அளவுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும்  தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார் .