ராணிப்பேட்டை மாவட்டத்தில் N-95 முகக்கவசங்களுக்கு இணையான திறன்கொண்ட ஆயுர்வேத முகக்கவசங்களை தயாரித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கி  பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் அசத்தி வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நாகய்யாசெட்டி  தெருவை சேர்ந்தவர் ராஜா (47) வாலாஜாபேட்டை பகுதியில் க்ளவ்ஸ், ஆசிட், பினாயில் மற்றும் வீடு சுத்தப்படுத்த தேவையான ஹவுஸ் கீப்பிங் உபகரணங்கள் விற்கும் விநியோகிஸ்தாரக  உள்ளார் இவரது மகன் சஜீத்(18) திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் BTech இரசாயன பொறியியல் (Chemical  Engineering ) பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். 




கொரொனா தாக்கம் காரணமாக பள்ளி கல்லூரிகள்  மூடப்பட்ட நிலையில்,  ஊரடங்கு காரணமாக கடந்த ஓர் ஆண்டுகளாக சஜித் வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்தச் சமயத்தில் தரமற்ற முகக்கவசங்களை தொடர்ச்சியாக அணிவதால் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படுவதை உணர்ந்த சஜித் சுவாச மண்டலத்தில் சிரமம் ஏற்படுத்தாத வகையில் ஆயுர்வேத முறையில் புதிய முகக்கவசத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக பல புத்தகங்களைப் படித்து மூலிகைகளின் பலன்களை தெரிந்து கொண்டு , மூலிகை செடிகளை மய்யமாக கொன்டே ஆயுர்வேத முக கவசத்தை தயாரிக்க சோதனைகளை மேற்கொண்டார் .


மேலும் சஜித், சுவாசக்கோளாறுகளை நீக்கும் அதிமதுரம், சிந்தில் கொடி,விஷ்ணுகிராந்தி, பர்படாகம், புதினா, துளசி,கஸ்தூரிமஞ்சள், கற்பூரம் உள்ளிட்ட 16 மூலிகைகளை கொண்டு மூலிகை முகக்கவசங்களை தயாரிக்கும் முயற்சியை தொடங்கினார் .




இதற்காக சென்னையில் இயங்கும் நாட்டுமருந்து விற்கும் மொத்த வியாபாரிகளை தனது தந்தையின் உதவியுடன் தொடர்புகொண்டு, அவர்களிடம் இருந்து தேவையான மூல பொருட்களை பெற்று முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் பணியை தொடங்கினார். உற்பத்தி செய்யப்பட்ட மூலிகை முகக்கவசங்களை  , பயன்படுத்துவதற்கு முன்பு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி (SOUTH INDIAN TEXTILES RESEARCH  - centre of excellence for medical textiles) மையத்திற்கு சோதனைக்காக அனுப்பி, இந்த மாஸ்க் கிருமிகளுக்கு எதிராக போராடக்கூடியது என்றும் , இதை பொதுமக்கள் உபயோகப்படுத்தலாம் என்று தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ ஜவுளிக்கான சிறப்பு மையத்தின் ISI  சான்றிதழையும் பெற்றுள்ளார் .


இது தொடர்பாக ABP செய்தி குழுமத்திடம் பேசிய சஜித் ," ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் வரையறையின் படி 20 பாஸ்கல் ஸ்கொயர் சென்டிமீட்டருக்கு குறைவாக உள்ள முகக்கவசங்கள் பொதுமக்கள் அணிய ஏற்றது . அதன்படி நான் தயாரித்துள்ள  இந்த முகக்கவசம் 7.659 பாஸ்கல் ஸ்கொயர் சென்டிமீட்டர் பெற்றுள்ளதால் , இது N-95 முகக்கவசங்களுக்கு  இணையான தரம் வாய்ந்தது என்றும் , இந்த மாஸ்க் 88.82 சதவீத ஆன்டிவைரல் ஆக்டிவிட்டி தன்மையுள்ளதாக இருப்பதாகவும் சான்று வழங்கி உள்ளனர்" என்று தெரிவித்தார். தனது தந்தையின் உதவியுடன் கடந்த இரண்டு மாதங்களாக ஆயுர்வேத முகக்கவசங்களை தயாரித்து விநியோகம் செய்துவரும் சஜித், ஒரு முகக்கவசத்தை 30 ருபாய் வரை விற்றுவருகிறார். மேலும் முன்களப் பணியாளர்களான , துப்பரவு பணியாளர்கள் , சாலை ஓரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு இலவசமாகவும் இந்த மூலிகை முகக்கவசங்களை வழங்கி வருகிறார் .




காட்டன் துணியை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசத்தை மூலிகைகள் அடங்கிய சிறு குப்பி ஒன்று இதில் பொருத்தப்பட்டுள்ளது . இந்த குப்பியில்  நிரப்பப்பட்டுள்ள 16 மூலிகைகள் அடங்கிய கலவையை சுவாசிக்கும்போது  இருமல் ,சளி, கபம், தொண்டை வலி, உள்ளிட்ட சுவாசக்கோளாறுகள் ஆகியவை நீங்குவதோடு, புத்துணர்ச்சியோடு இருப்பதாகவும் ,சுவாசிக்க எளிமையாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .


அதிகபட்சமாக 15  நாட்கள் வரை இந்த முக கவசத்தை பயன்படுத்தலாம் என்று தெரிவித்த சஜித், தான் இதுபோன்று, மூலிகை தேநீர், தானியங்கி கிருமிநாசினி வெளியேற்றும் கருவி, உள்ளிட்ட மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய 18 வகையான கருவிகளை வடிவமைத்துள்ளதாகவும், இதற்கு தமிழ் நாடு அரசு  உரிய அங்கீகாரம் அளிக்கவேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டார் .