குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், அத்திட்டம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிப் பெற்ற திமுக கூட்டணி பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் மிக முக்கியமான ஒன்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை திட்டம். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை இந்த திட்டம் செயல்பாட்டு வரவில்லை.
இதனைப் பற்றி எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கேள்வி எழுப்பினர். , தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை சரியானதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நடப்பாண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
இதனிடையே இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உரிமைத் தொகை வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதனிடையே இந்த உரிமைத் தொகை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி,
- சட்டப்பேரவையில் விளக்கம் கொடுத்த முதலமைச்சர், உரிமைத்தொகை குடும்பத்தலைவிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், இதன் மூலம் நடைபாதை வியாபாரிகள், மீன் பிடிப்பது, கட்டுமானத் தொழில், சிறிய கடைகள், சிறிய தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளம் பெறுபவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரே நாளில் வேலை பார்க்கும் பெண்கள் ஆகியோர் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்திற்கு தகுதியான மகளிரை அடையாளம் காணவும், விவரங்களை சேகரிக்கவும் போன்ற பணிகளை விரைவில் அரசு தொடங்க உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும், இவை நியாயவிலை கடைகளுக்கு அருகில் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வருவாய்துறை அலுவலர்கள் இந்த முகாமை நடத்துவார்கள். இந்த முகாமில் பெண்கள் எந்த வகை குடும்ப அட்டை, ஆதார் எண், குடும்ப உறுப்பினர்கள் தொழில் உள்ளிட்ட பிற விவரங்கள், வங்கி கணக்கு எண் போன்றவற்றை சரியாக கொடுக்க வேண்டும். இந்த முகாம்களில் பணிகள் அடுத்த வாரம் தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த திட்டத்தில் ஒரு கோடி பெண்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.