துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட கோவை டிஐஜியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

கோவையின் சரக டிஐஜியாக இருந்த விஜயகுமார் இன்று அதிகாலை நடைப்பயிற்சிக்கு பிறகு தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டிஐஜியின் இந்த விபரீத முடிவு போலீசார் மத்தியிலும், கோவையிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டிஐஜியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. டிஐஜி விஜயகுமாரின் மரணத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் இது குறித்து டிவிட்டரில் இரங்கல் தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,” கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய விஜயக்குமாரின் பணி போற்றத்தக்கது. அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Continues below advertisement

காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த திரு.விஜயகுமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே விஜயகுமார் IPS-ன் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என கேட்டுக் கொண்டுள்ளார். 

உயிரிழந்த டிஐஜியின் உடல் உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டிஐஜி விஜயகுமாரின் முடிவு குறித்து பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், “ டிஐஜி விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக மருந்துகளை எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். இந்த சூழலில்தான் அதிகாலை நடைபயிற்சி சென்ற அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற டிஜிபி, அவரின் இந்த முடிவுக்கு பணிச்சுமை காரணம் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார், 2009ம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அவர், சென்னை அண்ணா நகர் துணை ஆணையராகவும் பணியாற்றி வந்துள்ளார். அவரது திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்று கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்.