வரும் 22 முதல் 27-ம் தேதி வரை இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் நடைபெற உள்ளது. 


மேற்படி முகாமில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய ஆதார் பதிவு, கருவிழி ரேகை பதிவு மற்றும் புகைப்படம் மாற்றம் செய்தல், ஆதார் நிலை அறிதல், பெயர்/பிறந்த தேதி/முகவரி/தொலைபேசி/மின்னஞ்சல் ஆகியவை மாற்றம் செய்தல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. 


இந்த முகாமில் புதிதாக ஆதார் எடுக்க கட்டணம் கிடையாது என்றும்  ஆதார் திருத்தம் செய்ய மட்டும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. காலை எட்டு அணி முதல், இரவு எட்டு மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம்.     


இந்திய அஞ்சல்துறை தனது சேவைகளை நாளுக்கு நாள் விரிவுபடுத்தி வருகிறது. கடந்த 2020ல் மட்டும்  7 இலட்சத்துக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், 99 இலட்சம் ஆதார் பதிவு/ புதுப்பிப்பு மனுக்கள்  தபால் அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டன. கொரோனா நெருக்கடி காலத்தில் மருந்துகளை விநியோகிக்க இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் உட்பட பல நிறுவனங்களுடன் இந்தியத் தபால் துறை இணைந்து செயல்பட்டது. நாடு முழுவதும் 1.56 இலட்சம் தபால் அலுவலகங்கள் மூலம், 50 கோடிக்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு தபால் துறை சேவையாற்றுகிறது. ஊரடங்கு நேரத்தில் சிறந்த தபால் சேவை ஆற்றியதற்காக இந்தியா டுடேயின் ஹெல்த்கிரி விருதை இந்தியத் தபால்துறை வென்றது.


ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண் ஆகும். இந்திய வசிப்பாளராக இருக்கும் எவர் ஒருவரும் அவரது வயது, பாலினம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் ஆதார் எண் பெறுவதற்காக தாங்களாக முன்வந்து பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணில் நுண்ணறிவோ அல்லது ஜாதி, மதம், வருமானம், சுகாதாரம் மற்றும் பூகோள அடிப்படையில் தகவல்களை தொகுக்கும்முறையோ இல்லை. ஆதார் எண் என்பது அடையாளச் சான்று மட்டுமே. எனினும், இது ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு குடியுரிமை அல்லது வசிப்பிட உரிமை வழங்குவதில்லை


முன்னதாக,கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு பெரியதொரு உதவியை அளிக்கும் விதமாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிறப்பு நோக்க முகமையான பொதுச் சேவை மையங்களில், வங்கியியல் தொடர்பாளர்களாகச் (BCs) செயல்படும் 20,000  பொதுச் சேவை மையங்களில் ஆதார் புதுப்பிப்பு வசதியைத் தொடங்குவதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனுமதித்துள்ளது. 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண