மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய அம்மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மேற்கு வங்க ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்த செயல், உயர்ந்த பதவியில் இருந்து எதிர்பார்க்கப்படும் எந்த உரிமையும் இல்லாமல், நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் முக்கிய தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக, மேற்கு வங்க சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளை அந்த மாநில ஆளுநர் அறிவித்த சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளையும் மம்தா பானர்ஜி கலைப்பதாக அறிவித்தார்.
அவரது தலைமையின்கீழ் 19 உறுப்பினர்களை கொண்ட புதிய செயற்குழுவை உருவாக்கியுள்ளார். இந்த குழுவில் அபிஷேக் பானர்ஜி, பிர்ஹாத் ஹக்கிம், யஷ்வந்த் சின்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர்களைக் கூட்டுவதற்கும், கூட்டத்தொடரினை இறுதி செய்வதற்கும், கலைப்பதற்கும் ஆளுநர்க்கு முழுஅதிகாரத்தை இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ளது. இருந்தாலும், முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தான் ஆளுநர் ஓவ்வொரு முறையும் செயல்பட வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்