ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை பெற இந்தியாவில் உருவான, முதல் கூட்டணியின் ”ஜம்புத்தீவு”  பிரக்டனம் தொடர்பாக இந்த தொகுப்பில் அறியலாம்.


222 ஆண்டுகால வரலாறு..!


”ஜம்புத்தீவு” பிரகடனம் என்பது நம்மில் பலரும் அறிந்திடாத 222 ஆண்டுகள் பழமையான,  இந்திய விடுதலைக்காக தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட நாட்டின் முதல் முயற்சியாகும். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தியடைய உள்ள நிலையில், நாட்டின் முதல் சுதந்திர போராட்டம் என கூறினாலே, பெரும்பாலானோருக்கு 1857ம் அண்டு மீரட்டில் நடந்த சிப்பாய் கலகம் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வீரம் தழைத்தோங்கும் தமிழ் மண்ணில் இருந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர் முழக்கம் தொடங்கி விட்டது என்பதே உண்மை. அதை முழுமையாக அறிய 222 ஆண்டுகள் வரையில் பின்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியம்.


ஆங்கிலேயர் பெற்ற உரிமை:


18ம் நூற்றாண்டு வணிகம் எனும் பெயரில் ஒருங்கிணைந்த இந்தியாவிற்குள் நுழைந்து படிப்படியாக, ஒட்டுமொத்த நிலப்பரப்பையே தங்களது கைக்குள் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்துகொண்டிருந்த காலம். அந்த சூழலில், கர்நாடக நவாப் ஆக இருந்த முகம்மது அலி-க்கும் அவரது சகோதரியை மணந்த சாந்தா ஷாகிப் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை முடிவுக்கு கொண்டு வர முகம்மது அலி ஆங்கிலேயர்களின் ஆதரவையும்,  சாந்தா ஷாகிப் பிரான்ஸின் ஆதரவையும் நாடினார். இந்தப் போரில் வெற்றி பெற்ற முகம்மது அலி ஆற்காடு கோட்டையையும், திருச்சி கோட்டையையும் தன்வசமாக்கினார். இதற்கு உதவிய, ஆங்கிலேயர்களுக்கு பாளையங்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை முகமது அலி தானமாக வழங்கினார். அதன்படி,  பாளையக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் வரி வசூலில் ஈடுபடத் தொடங்கினர்.


”ஜம்புத்தீவு” பிரகடனம்:


ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்துவதற்கு அப்போதைய சிவகங்கையை ஆண்டு வந்த மருது சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்கிலேயர்களை மொத்தமாக நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்ற நோக்கில், குறுநில மன்னர்கள், பாளையக்காரர்களை உள்ளடக்கிய ஒரு தீபகற்ப கூட்டணியை உருவாக்க முயற்சித்தனர். தொடர்ந்து,  1801ம் ஆண்டு ஜுலை மாதம் 16ம் தேதி ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் வகையிலான வாசகங்களுடன் கூடிய 'நாவலந்தீவு பிரகடனம்' என்ற 'ஜம்புத்தீவு' பிரகடனத்தை திருச்சி மலைக்கோட்டை வாசலிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மதில் சுவரிலும் மருது சகோதரர்கள் ஒட்டினர். 


பெயர் காரணம்:


திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையில் ஒரு தீவு போல ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் அமைந்துள்ளது. திருவானைக்காவல் கோயிலில் வீற்றிருக்கும் சிவன் பெயரில் இந்த தீவு, ஜம்புத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே இங்கு ஒட்டப்பட்ட பிரகடனம் ஜம்புத்தீவு பிரகடனம் என பெயர் பெற்றது.


நாட்டின் முதல் போர் முழக்கம்:


சின்ன மருதுவின் பெயரில் வெளியான அந்த பிரகடனத்தில்ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், மறையர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், சாம்பவர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரையொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்து கொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். ஆதலால்,  மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாய்க்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்.  இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி முடிக்கு சமமானது. இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள். இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள். எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்.


இப்படிக்கு,
மருது பாண்டியன்
பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதிஎன குறிப்பிடப்பட்டு இருந்தது.


ஆங்கிலேயர்களை எதிர்கொண்ட தமிழர்கள்:


இந்த பிரகடனம் தொடர்பாக அறிந்த ஆங்கிலேய ராணுவம் சிவகங்கைப் பகுதியை முற்றுகையிட்டது. இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முறையாக ஆங்கிலேயருக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை வெளியிட்டு, ஆங்கிலேயப் படைகளைப் போர்க்களத்தில் சந்தித்தவர்கள் மருது சகோதரர்கள் தான். இந்த போரின் போது, மருது பாண்டிய சகோதரர்களும், அவர்களது ஆண் வாரிசுகளும், தளபதிகளும், போராளிகளும் சிவகங்கை– திருப்பத்தூர் பகுதிகளில் கண்ணில்பட்டவுடன் உரிய விசாரணையும் மேலிட ஆணையுமின்றி அழித்தொழிப்பதற்கு ஆங்கிலேயர்களும்,  துரோகிகளும் இணைந்து திட்டமிட்டனர்.


கொல்லப்பட்ட வீரர்கள்:


அதன்படி, அக்டோபர் 24, 1801 தொடங்கி ஜெனரல் ஆக்னியூ தலைமையில் மருது பாண்டிய சகோதரர்கள் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். தொடர்ந்து, அவர்களது போர்ப்படையில் பணியாற்றிய தளபதிகள், மருது பாண்டியர்களின் ஆண் வாரிசுகளான 10, 12 வயதே நிரம்பிய சிறுவர்களை தூக்கிலிட்ட கொடுமையை எல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்களின் நாட்டுப்பற்றை போற்றும் விதமாக தான், மருது சகோதரர்களின் நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது. அங்கு மருது சகோதரர்கள் கடவுள்களாகவே பாவிக்கப்படுகின்றனர்.


பொதுமக்கள் கோரிக்கை:


இந்நிலையில், ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிடப்பட்ட இடமான திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகிய இடங்களில் அதனை போற்றும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்க பொதுமக்கள் லியுறுத்தி வருகின்றனர். அதோடு “வருங்கால தலைமுறையினர், மருது சகோதரர்களின் வீரத்தையும், நாட்டுப் பற்றையும் அறியும் வகையில், ஜம்புத்தீவு பிரகடனம் பள்ளிப்பாடங்களில் சேர்க்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதோடு, நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டம் தமிழர்களால் தான் நிகழ்த்தப்பட்டது என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதால், அதனை மத்திய அரசு அங்கீகரித்து அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.