சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சேலம் மண்டலத்தில் வருமானவரி அதிகம் செலுத்துபவர்கள் மற்றும் வருமானவரித்துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை தலைமை வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு வரி செலுத்துவதில் சந்தேகங்கள் பற்றி கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை தலைமை வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன், "தமிழகத்தில் ரூபாய் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி இந்த ஆண்டு வருமான வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 83 சதவீதம் தற்போது வசூலிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்திய அளவில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அதிக அளவில் வரி வசூல் செய்வதில் மூன்றாவது இடத்தில் உள்ளோம். சேலம் மண்டலத்தில் வருமான வரி வசூல் இந்த ஆண்டு ரூ. 900 கோடி இலக்கு நியமிக்கப்பட்டிருந்தது. இதில் தற்போது வரை 55 சதவீதம் வருமான வரி வசூல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வருமான வரி வசூலில் சேலம் முக்கிய இடத்தில் உள்ளது. சென்னை மற்றும் கோவை மண்டலத்திற்கு அடுத்தப்படியாக சேலம் மண்டலம் வருமான வரி வசூலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் வருமான வரி வசூல் அதிக அளவில் உள்ளது” என்று கூறினார்.
மேலும், “தற்போது, வருமான வரி செலுத்த இ ஃபைலிங் என்ற சிஸ்டம் கொண்டு வந்திருக்கிறோம். இதை வருமான வரி செலுத்தும் அனைவரும் வரவேற்றுள்ளனர். இந்த இ ஃபைலின் முறை எளிதாக உள்ளதாகவும் வருமான வரி செலுத்துபவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 67 லட்சம் பேர் வருமான வரி செலுத்துகின்றனர். வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் 12 சதவீதம் அதிகரிக்கிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு தற்போது 30 சதவீதம் வருமான வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
வரி ஏய்ப்பு செய்பவரை கண்டுபிடிக்க 60 ஏஜெண்டுகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறோம். இவர்கள் அனைவரும் வரி ஏய்ப்பு செய்பவர்களை உடனடியாக கண்டறிந்து வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரூபாய் 10 லட்சத்திற்கும் மேலாக யாரேனும் பணப்பரிவர்த்தனை செய்தால் உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்துவிடும். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் வரி ஏய்ப்பு செய்வதற்கு வாய்ப்பு இல்லை. அதனையும் மீறி வரியை ஏய்ப்பு செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நிறுவனங்களில் பணிபுரிவோர் டிடிஎஸ் நடைமுறையிலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை சிறப்பாக செயல்படுகிறோம். வெளிநாடுகளில் பணம் வைத்துக்கொண்டு வரி செலுத்தாதவர்களின் தகவல் சேகரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தமிழ்நாடு மற்றும் முதன்மை தலைமை வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.