கோயில் நகரம் , கொலை நகரமான கதை

 

காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். ஆரம்பத்தில் ரவுடியாக இருந்து வந்த ஸ்ரீதர் தனபாலன், படிப்படியாக வளர்ந்து காஞ்சிபுரம் மாநகர் பகுதியில் தவிர்க்க முடியாத நபராக இருந்து வந்தார். காஞ்சிபுரம் மாநகரில் ஸ்ரீதர் வைப்பதே சட்டமாகவும் இருந்து வந்தது. 

 

இந்நிலையில் தான் காவல்துறையினர், ஸ்ரீதரை கைது செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பொழுது வெளிநாடு தப்பிச் சென்றார். காவல்துறையினர் தன்னை சுற்றி வளைத்ததை அறிந்து கொண்ட ஸ்ரீதர் , கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து  கொண்டார்.


 

இவரின் முக்கிய கூட்டாளிகளான ரவுடி தினேஷ்குமார் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட சுமார் 30 வழக்குகளும், ரவுடி தியாகு என்பவர் மீது 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உள்பட சுமார் 51 வழக்குகளும் உள்ளன. ஒரு கட்டத்தில் தினேஷ் குமார் மற்றும் தியாகு ஆகியோர் இருவரும் தனி கோஷ்டிகளாக பிரிந்து கொண்டு, தங்களில் யார் அடுத்ததாக தாதா போட்டியில் 13-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்து கொண்டனர். இதனை அடுத்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்து,  கட்டுக்குள் கொண்டு வந்தனர். 



 

மீண்டும் தலை எடுத்த அட்டகாசம்

 

இந்த நிலையில், பொய்யாக்குளம் தியாகு ஜாமினில் வெளிவந்த பொழுது, மீண்டும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் நகர் பகுதியில் அவ்வப்பொழுது இது போன்ற ரவுடிகள் அட்டகாசம் செய்வதும், ரவுடிகளை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் பகுதியில் மற்றொரு தாதா உருவாகாமல் இருக்க தொடர்ந்து பல்வேறு, நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 



 

மற்றொரு மிரட்டல் சம்பவம்

 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த நெல் வியாபாரி தியாகு,  என்பவருக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர், சிறையில் இருக்கும் பொய்யாகுளம் தியாகு பெயரை கூறி மிரட்டல் வைத்துள்ளார். உடனடியாக தான் கேட்கும் தொகையை தரவில்லை என்றால், " சீன் வேற மாதிரி மாறிவிடும், உன் உயிரே என்னிடம் தான் இருக்கிறது,  நீ உயிரோடு இருக்க மாட்டாய், பணம் போட முடியுமா முடியாதா, ' நீ போடவில்லை என்றால் நீயே போன் செய்து பணத்தை போடுவாய்'" என தியாகுவை அந்த மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டி உள்ளார். 



 

காவல் நிலையத்தில் புகார்

 

இதனை அடுத்து தியாகு கொலை மிரட்டல் விடுத்ததை குறித்து சிவக்காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர. முதற்கட்ட விசாரணையில், ரவுடி பொய்யா குளம் தியாகுவின் நண்பராக கருதப்படும் பிரபா என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. பிரபா மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகர் பகுதியில் மீண்டும் ரவுடிகள் வியாபாரிகளை மிரட்டும், சம்பவம் நடைபெற்றுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.