அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு  மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கு, ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததா?  சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா என மூன்று அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.   செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், என் ஆர் இளங்கோ ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.  

கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்:  

  • சுங்க வரித் துறைக்கு கைது, காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் வழங்கியிருந்தாலும் புலன் விசாரணை அதிகாரம் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  
  • சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கை பொறுத்தவரை, புலனாய்வை அமலாக்கத் துறை மேற்கொள்கிறது என்றும் சட்ட விரோத பணபரிவர்த்தனை தடை சட்ட விதிகளை விளக்கி கபில்சிபில் வாதத்தை முன் வைத்தார்.  
  • இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை என கூறவே, இந்த வழக்கு தற்போது விசாரணை நிலையில்தான் உள்ளது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
  • கைதுக்கான காரணம் குறித்து தற்போது வரை கூறப்படவில்லை. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டம் 19வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கிறார் என நம்புவதற்கான காரணங்களும், ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறை துணை இயக்குனர், உதவி இயக்குனர் கைது நடவடிக்கை எடுக்கலாம்.
  • கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களை தெரிவித்து நீதிமன்ற காவலில் வைக்க கோரலாம்.
  • செந்தில் பாலாஜியை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.  சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது. அவரது காவல் சட்டவிரோத காவல் என்ற போது, நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ள போது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும் ? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை  ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என நீதிபதி கேட்டார்.
  •  புலன் விசாரணை நடத்துவது ஒரு போலீஸ் அதிகாரியின் வேலை. அவர்கள் போலீஸ் அதிகாரிகள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது என கபில் சிபில் தனது வாதத்தை முன்வைத்தார். அதற்கு அப்படியானால்அமலாக்கத்துறையை எவ்வாறு வகைப்படுத்துவது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
  • சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் பிரிவு 50ன் கீழ் மட்டுமே அவர்கள் விசாரணை நடத்த முடியும் என  உச்ச நீதிமன்றம் சொல்கிறது. உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு உள்ள அதிகாரம் போல்தான் அமலாக்கத்துறை அதிகாரம்.
  • மற்ற குற்ற வழக்குகளை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் புரிந்திருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் புலன் விசாரணை செய்து குற்றத்தை கண்டுபிடிப்பார்கள். ஆனால் சட்டவிரோத பணபரிவர்த்தனை தடைச் சட்ட வழக்குகளை பொறுத்தவரை, விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் புரிந்திருக்கிறார் என முடிவுக்கு வரும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் புகார் அளித்து அந்த வகையில் அமலாக்கத் துறையின் விசாரணை என்பது கைதுடன் முடிந்து விடுகிறது. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத் துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை ? மாவட்டஅமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் விசாரிக்க முடியவில்லை என்றால் அதை எதிர்த்து அமலாக்கத் துறை  ஏன் உயர் நீதிமன்றத்தை நாடவில்லை?