அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருப்பதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், காமராஜின் வீடு, அலுவலகம் உட்பட 49 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


மன்னார்குடியில் உள்ள காமராஜுக்கு சொந்தமான வீடு, நன்னிலத்தில் உள்ள உறவினர்களின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், காமராஜ் மட்டும் இல்லாமல், அவரது மகன்கள் இன்பன், இனியன், நண்பர்கள் சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, உதயம் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  காமராஜ் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை குவித்துள்ளதாக திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம்சாட்டி இருந்தனர். 


இந்த வழக்கு திருவாரூர் ஊழல் தடுப்பு  நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், காமராஜுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். 


தற்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையும் தீவிரமடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.