பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “சென்னை மெட்ரோ இரயில் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடந்து, மெட்ரோ இரயில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் மூன்று வழித்தடங்களில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்புக்கு இடையிலான 624வது மற்றும் இறுதி யு-கர்டரின் கட்டுமானப் பணிகள் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தன, இதன் மூலம் வழித்தடம்- 4ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான உயர்மட்ட வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது.
இந்த இறுதி யு-கர்டர் குமணஞ்சாவடி நிலையத்தில் உள்ள SP-04-05 தூண்களுக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணி முதல் 5:30 மணி வரை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இந்த முக்கியமான நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்திருந்ததால் மேலும் சிறப்பாக அமைந்தது, மேலும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய பல்வேறு பெண் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கவுரவிக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த சாதனையின் மூலம், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் இதுவரை மொத்தம் 3202 முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட கான்கிரீட் உத்திரங்கள் (precast concrete elements) மற்றும் 2 திறந்த வலை உத்திரங்கள்(Open Web Girders), உட்பட 164 இரும்பு விட்டங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன. இந்த மைல்கல், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை தடையற்ற இணைப்பை மேம்படுத்தும் வகையில், வழித்தடம் 4-ன் உயர்த்தப்பட்ட மேம்பால கட்டுமானத்தை வேகமாக நிறைவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் திரு. தி. அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் திரு.எஸ்.அசோக் குமார் (உயர்மட்ட வழித்தடம்), திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), பொதுஅலோசகர்கள் நிறுவனத்தின் குழுத் தலைவர் திரு. முருகமூர்த்தி, KEC International நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் திரு. கந்தசாமி மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு மெட்ரோ நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதோடு “அர்ப்பணிப்பு மற்றும் அதிகாரமளிப்புடன், CMRL-ல் உள்ள பெண் வல்லுநர்கள் ஒவ்வொரு நாளும் தடையற்ற பயணத்திற்கு பங்களிக்கின்றனர், பாதுகாப்பான மற்றும் திறமையான பொது போக்குவரத்தை உறுதி செய்கிறார்கள். மகளிர் தின வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளது.