ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டோக்கியோவில்  ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization JETRO) இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளார்கள் மாநாட்டில் அந்நாட்டின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நாட்ட்டின் ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி மதிப்பிற்கு முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.


 ”டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தியறிந்து. அதிர்ச்சியாகப் பலரும் என்னிடம் நிலைமை என்ன என்று கேட்டார்கள். டோக்கியோவைப் பொறுத்தவரை இது சாதாரணச் செய்தி. இங்கே நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் நடப்படை -அதற்கிடையேதான் துணிச்சலோடு மக்கள் வாழ்கிறார்கள், செயல்படுகிறார்கள். வெற்றியும் பெற்றுக் காட்டுகிறார்கள் என்றேன்.


இயற்கை நெருக்கடியாக இருந்தாலும் செயற்கை நெருக்கடிகளாக இருந்தாலும் அதனை வென்று காட்டுபவர்கள் ஜப்பானியர்கள். இரண்டு நாட்கள் சிங்கப்பூரிலும் மூன்று நாட்களாக ஜப்பானிலும் இருக்கிறேன். இங்கு பார்க்கும் நிறுவனங்களின் அதிபர்கள் தலைவர்கள் ,பணியாளர்கள் ஆகியோர் முகத்தில் நான் பார்க்கும் உற்சாகம் என்பது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் உருவாக்கி இருக்கிறது.


ஜப்பான் நாட்டின் தலைநகராக செயல்திறனும் கொண்டு உயர்ந்து நிற்கும் டோக்கியோ நகருக்கு வந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.


உலகின் மிகப்பெரிய பொருளாதார நகரங்களில் ஒன்றாக உலகப் புகழ்பெற்ற 500 நிறுவனங்களில் 51 நிறுவமனங்களின் தலைமையகங்கள் இயங்கும் நகரமாக டோக்கியோ விளங்குகிறது. இரண்டாம் உலகப் போரில் தாக்குதலுக்கு உள்ளானாலும். உழைப்பும் செயல்திறனும் கொண்டு உயர்ந்து நிற்கும் நகரம். நாடு தழுவிய போக்குவரத்து,  பெரும் கடைகள் மற்றும் உணவகங்கள்,  உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள்,புத்துணர்ச்சி ஊட்டும் இயற்கை இடங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், உயரமான வானளாவிய கட்டடங்கள்,தனித்துயமான அருங்காட்சியங்கள் - என அமைந்து ஒரு நகரம் எப்படி அமைய வேண்டும் என்பதை டோக்கியோ எடுத்துக் காட்டுகிறது.


நகரத்தின் அனைத்து எரிசக்தித் தேவைகளும், ஹைட்ரஜன், காற்றாலை மின்சாரம் மற்றும் சூரியஒளி எரிசக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் பூர்த்தி செய்யப்படுவதை கண்டு நான் வியந்து போகிறேன். இது எனது கனவுகளின் அகலத்தை பெரிதாக்குகிறது. எங்கள் தமிழ்நாட்டை எப்படி உருவாக்க நினைக்கிறோமோ - அந்தக் கனவுப் பரப்பை நான் இங்கு பார்க்கும் காட்சிகள் அதிகப்படுத்தி இருக்கிறது. இதனை எனது வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது.” என்று ஜப்பான் நாட்டின் சிறப்புகள் பற்றி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.


மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்:


சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும்முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.


பழம்பெரும் ஜனநாயக நாடுகள்


இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,” இந்தியாவும் ஜப்பானும் ஆசியாவின் இரண்டு பெரிய மற்றும் பழம்பெரும் ஜனநாயக நாடுகள். குறிப்பாக சொல்லப்போனால், ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை (Official Development Assistance – ODA) அதிகம் பெறும் நாடு இந்தியாதான். இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகள், சமீப காலங்களில் மிகப்பெரும் எழுச்சி கண்டுள்ளது. இந்திய சந்தைக்குள் நுழையும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இந்தியாவுக்குள், தமிழ்நாடுதான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக விளங்குகிறது. தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திடஉகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.


நிசான், தோஷிபா, யமஹா, கோமாட்ஸூ, ஹிட்டாச்சி போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித் திட்டங்களைத் தமிழ்நாட்டில் அமைத்துள்ளது.


அது மட்டுமல்ல. ஜப்பான் - இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.


ஜப்பான் புத்துணர்ச்சியை உருவாக்கியுள்ளது -முதலமைச்சர் நெகிழ்ச்சி! 


“தமிழ்நாடு அரசைப் பொறுத்த வரையில், எப்போதுமே, ஜப்பான் நாட்டின் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு முயற்சிகள் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்துடன் (METI) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், JETRO நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜப்பான் வணிக மற்றும் தொழில் பேரவை (JCCI) ஆகிய நிறுவன ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு அல்லாமல், கனகாவா, ஹிரோஷிமா மாகாணங்களுடன் பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் மிகப் பெரும் வங்கிகளான, பேங்க் ஆஃப் டோக்கியோ – மிட்சுமிஷி, மிசுஹோ வங்கி போன்ற வங்கிகளுடன் புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல மாகாணங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.”என்று இரு நாடுகளுக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றி முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.


புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்கு ஆற்றிடும் விதமாக, 2030-2031 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான ஒரு இலட்சிய இலக்கினை நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம்.


கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி, இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி ரூபாய் என்ற அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே 5,596 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4,244 நபர்களுக்குவேலை வாய்ப்பு என்ற வகையில், 5 ஜப்பானிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.


முதலீடு செய்ய அழைப்பு:


இந்நிகழ்ச்சியில், ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடுகளை மேற்கொள்கின்றன. இந்நிலையை சற்றே விரிவுபடுத்தி, உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களிலும் முதலீடு மேற்கொள்ள வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.