இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் துறை பட்ஜெட்டில் சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பணம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


2023-24 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவது, பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்குவது, சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் போன்ற, சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படுவது போன்ற  பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21ம் தேதி வரை  நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.


வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையானது தமிழகம் முழுவதும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பல்வேறு வழிகளில் கருத்து கேட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்க முடியாதவர்கள் மக்கள் உழவன் செயலியில் தங்களது கருத்தை தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டது. மேலும், கடிதம் மூலமும், 9363440360 என்ற வாட்ஸ் அப் எண் மூலமும், tnfarmersbudget@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் விவசாயிகளின் கருத்துகள் பெறப்பட்டன.  அந்த கருத்துகளின் அடிப்படையில் வேளாண்துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.


இந்த வேளாந்துறை பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிபிட்ட சிலவற்றை காணலாம்..



  •  ஊருக்கு 300 குடும்பங்கள் வீதம் 15 லட்சம் இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்படும் - 2504 கிராம ஊராட்சிகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 வீதம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.

  • வரலாறு காணாத அளவில் நெல் நேரடி கொள்முதல் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது - ரூ.1695 கோடி அளவிற்கு பயிர் காப்பீடு மானியமாக 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. .

  • வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கு வகையில் புதிய பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை - தரிசாக உள்ள நிலங்களை கண்டறிந்து ஆள்துளை கிணறுகள் அமைக்கப்படும்.

  • நெல் சாகுபடி மூலம் அதிக மகசூல் செய்யும்  விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் பரிசு சிறுதானிய விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

  • குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - நீலகிரி மாவட்டத்தில் ரூ.50 கோடி அங்கக வேளாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்

  • சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பணம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும்

  • சிறு -குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடியில் 60 ஆயிரம் வேளாண் கருவிகள் தொகிப்பு வழங்கப்படும் - 1 லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடிக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு

  • வேளாண் உற்பத்தி, கொள்முதல் உள்ளிட்டவற்றிற்காக 37 மாவட்டங்களில் பணமில்லா பரிவர்த்தனையை விரிவுப்படுத்த திட்டம் - 355 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் ரூ.2 கோடியில் மின்னணு உதவி மையங்கள் அமைக்கப்படும்.