தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


பாஜக நிறுவப்பட்ட 44வது ஆண்டு தினம் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை தியாகராய நகரில் பாஜக தலைமையகமான கமலாலயம் அமைந்துள்ள பகுதியின் அருகில் உள்ள சுவர்களில் தாமரைச் சின்னத்தை அண்ணாமலை வரைதார்.


பின்னர் பேசிய அண்ணாமலை, ”


பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நம் பிரதமரின் இலக்கும், நம் தேசியத் தலைவர்ன் இலக்கும் களத்தில் செயல்படுத்தப்பட வேண்டும். பாஜக வலுப்பெற்று 2026ல் தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும். இதுதான் நமது இலக்கும் பணியும்” என்றார்.


சமீபகாலமாகவே அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவை தனிப்பெருங்கட்சியாக வளர்க்க வேண்டும் கூட்டணியில் இருந்தாலும் பாஜகவின் வளர்ச்சியே முக்கியம் என்றெல்லாம் பேசி வருகிறார். அதனால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. டெல்லியில் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, கட்சித் தலைமையகத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார். அப்போது உரையாற்றிய அவர், ”பாஜக ஒரு அரசியல் கட்சிதான் என்றாலும் கூட அது இந்த தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகவே வேலை செய்கிறது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளது. நாம் எல்லோரும் இப்போது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமரின் பார்வையின் கீழ் உழைக்கிறோம்” என்றார்.


பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவில் பேசுகையில், ”இன்று ராமரின் ஆகச்சிறந்த பக்தரான அனுமனின் பிறந்தநாள். மற்றவர்களுக்காக அனுமன் எதையும் செய்ய வல்லவர். ஆனால், அவர் தனக்காக எதையும் செய்துகொள்ளாதவர். அனுமனுக்கும் பாஜகவுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அனுமனைப் போலத்தான் பாஜகவும் தனக்காக எதையும் செய்து கொள்ளாமல் இயக்கிக் கொள்கிறது. பாஜக சமூக நீதியில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே, ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சுகாதார காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அனுமனின் வாழ்க்கையின் அடிநாதம் 'நம்மால் முடியும்' என்ற எண்ணம்தான். அதுவே அவரது அனைத்து வெற்றிக்கும் காரணமாக இருந்துள்ளது. பாஜகவினர் ஒவ்வொருவருக்கும் அனுமனின் ஆசி கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்.


அனுமன் தனது சக்தியை உணர்ந்து கொண்டது போல இந்தியா தற்போது அதன் சக்தியை உணர்ந்து கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் தேவையான உந்துதலை பாஜக அனுமனிடம் இருந்து பெறுகிறது. பாஜக நிறுவன நாளில் தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் தலை வணங்குகிறேன். 


எதிர்க்கட்சிகளின் இலக்குகள் சிறியவை. பாஜகவின் இலக்குகளும் பெரியவை. எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியவில்லை.சிறிய அளவிலான இலக்குகளையே நிர்ணயித்து அதிலேயே அவை திருப்தி அடைந்து விடுகின்றன. மிகப் பெரிய கனவுகளைக் காண்பதிலும், மிகப் பெரிய இலக்குகளை அடைவதிலும் பாஜக நம்பிக்கை கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் ஒருபோதும் சிந்தித்திக்கூடப் பார்த்ததில்லை.” என்றார்