மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றவுடன் பல ஐபிஎஸ்,ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி உத்தரவு பிறப்பித்து வருகிறது. அந்தவகையில் நேற்று தமிழ்நாட்டில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்கள். அவர்களில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிடை மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முக்கியமான இடங்களில் 7 இளம்  ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. 


அதன்படி ஏஎஸ்பியாக இருந்த கார்த்திகேயன் ஐபிஎஸ் மற்றும் பிரதீப் குமார் ஐபிஎஸ் ஆகிய இருவருக்கும் எஸ்பி அந்தஸ்து பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் சென்னையில் துணை ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கார்த்திகேயன் ஐபிஎஸ் கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பிரதீப் குமார் ஐபிஎஸ் பெருநகர போக்குவரத்து காவல்துறையின் வடக்கு பிரிவிற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 




இவர்கள் தவிர சென்னையில் நியமிக்கப்பட்டுள்ள மற்ற புதிய துணை ஆணையர்கள் திஷா மிட்டல் ஐபிஎஸ்(மயிலாப்பூர்), சிவ பிரசாத் ஐபிஎஸ்(வண்ணாரப்பேட்டை),இ.சுந்தரவதனம் ஐபிஎஸ்(மாதவரம்), தீபக் காங்கியர் ஐபிஎஸ்(அண்ணாநகர்),என்.குமார் ஐபிஎஸ்(சென்னை போக்குவரத்து தெற்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையராக சங்கர் ஜீவால் பதவியேற்ற பிறகு முதல் முறையாக சென்னையில் இப்படி புதிய அதிகாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


இதன்மூலம் தற்போது சென்னையில் உள்ள 12 துணை ஆணையர் பதவிகளில் 9 பேர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். இவர்கள் அனைவரும் 2009 முதல் 2017 வரை தேர்வாகியிருந்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். மீதமுள்ள மூவரும் தமிழ்நாட்டு குரூப் 1 மூலம் தேர்வாகி பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் ஆவர். 


காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு துணை ஐ.ஜியாக இருந்த ராஜேந்திரன் ஐ.பி.எஸ். சென்னை கிழக்கின் காவல் மற்றும் சட்ட ஒழுங்கு இணை ஆணையர் மற்றும் துணை ஐ.ஜியாகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை சரக டி.ஐ.ஜியாகப் பொறுப்பு வகித்த நரேந்திரன் ஐ.பி.எஸ்., தென் சென்னையின் காவல் மற்றும் சட்ட ஒழுங்கு இணை ஆணையர் மற்றும் டி.ஐ.ஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  கிழக்கு சென்னையின்  டி.ஐ.ஜி மற்றும் காவல் ,சட்ட ஒழுங்கு இணை ஆணையராக இருந்த வி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்.  மத்திய திருச்சிராப்பள்ளியின் ஐ.ஜி.யாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். பெண் அதிகாரிகளில் திருவாரூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த கயல்விழி ஐ.பி.எஸ். மட்டும் பதவி உயர்வு பெற்றுள்ளார். 




டி.ஐ.ஜியாகப் பதவி உயர்வு பெற்றுள்ள அவர் திருச்சி மாவட்ட ஆயுதக் காவல் டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றபடி, சென்னை தலைமைச்செயலக டி.ஐ.ஜியாக இருந்த மகேஸ்வரி ஐ.பி.எஸ். சேலம் சரக டி.ஐ.ஜி.,யாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜிலன்ஸ் மற்றும் லஞ்சஒழிப்புத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ராதிகா ஐ.பி.எஸ்.,  திருச்சி சரக டி.ஐ.ஜியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த சாமுண்டீஸ்வரி ஐ.பி.எஸ்.,  சென்னை பெருநகரக் காவல்துறை தலைமையகத்தின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.