"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 367 கிராம ஊராட்சிகள் உள்ளடங்கிய பகுதிகளில் 92 முகாம்கள் இன்று முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இம்முகாம்களில் பொதுமக்கள் அதிகம் அணுகும் 15 துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்க விழா ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் நடைபெற்றது. முகாமினையொட்டி அமைக்கப்பட்டிருந்த அனைத்துத் துறை சார்ந்த குறைகேட்புப் பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை கே.என்.நேரு மற்றும் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் அளித்த 51 மனுக்கள் மீது உடனடியாக 2 மணி நேரத்தில் தீர்வு காணப்பட்டு, ரூ.13.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருவரும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "பொதுமக்கள் தங்களது குறைகளை அதிகாரிகளை, அரசு அலுவலகங்களைத் தேடிச் சென்று மனுக்களாக வழங்கி வந்தனர். திமுக ஆட்சியில் பொதுமக்களைத் தேடி அதிகாரிகள் சென்று குறைகளை கேட்டு தீர்வு காணும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் ஒரு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் தங்கியிருந்து முழுமையாக ஆய்வு செய்து தேவையான திட்டப்பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். இதேபோன்று தற்போது ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் முகாமில் வழங்கப்படும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது" என்று பேசினார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ததற்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக பேசிய தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அழையா விருந்தாளியாக நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். தேர்தல் நடைபெற்றதால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அரசு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மக்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அமைச்சர் கே.என் நேரு இங்கு பொறுப்பு அமைச்சராக வந்த பிறகு சேலம் மாவட்டம் சிறந்த மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
நேற்று வரை எதிரும் புதிருமாக இருந்த பாமக எம்எல்ஏக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. மக்களுக்காக அவர்கள் இருவரும் முன்வந்துள்ளனர் என பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் மற்றும் சதாசிவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சுட்டிக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் , சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.