சென்னை ஐஐடியில் சாதியா பாகுபாடு காரணமாக பேராசிரியர் ஒருவர் நேற்று திடீரென தனது பணியை ராஜினாமா செய்தார். இந்தச் சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 30ஆம் தேதி தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் சார்பில் சென்னை ஐஐடிக்கு ஒரு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதில் போதுமான அளவில் எஸ்சி மற்றும் எஸ்டி பேராசிரியர்களை நியமிக்காதது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸ் சென்ற அடுத்த நாளே ஒரு பேராசிரியர் அங்கு சாதிய பாகுபாடு காட்டப்படுகிறது என்று பதவி விலகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


தரவுகள் கூறுவது என்ன?


சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடுகள் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் அவலநிலையாக உள்ளது. ஏனென்றால் ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் உறுப்பினர் ஸ்வராஜ் வித்வான், “ஐஐடி சென்னையில் எஸ்சி எஸ்டி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் என்று வரும்போது மிகவும் மோசமாக உள்ளது. அங்கு எஸ்சி எஸ்டி வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுவதில்லை. 


குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் எம்.எஸ் பட்டப்படிப்பிற்கு வெறும் 47 எஸ்சி, 6 எஸ்டி மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பிஎச்டி என்ற ஆராய்ச்சி படிப்பிற்கும் கடந்த 10 ஆண்டுகளில் 213 எஸ்சி மற்றும் 21 எஸ்டி மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பேராசிரியர்கள் தேர்வும் சரியாக இடஒதுக்கீடு முறையை பின்பற்றி நடைபெறவில்லை ” எனக் கூறியிருந்தார். 




இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் ஒன்றை அளித்தது. அதன்படி 2020ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பிற்கு எஸ்சி மாணவர்கள் 10%, எஸ்டி மாணவர்கள் 3% சேர்க்கப்பட்டுள்ளனர். அதுவே 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை எஸ்சி 8%மற்றும் எஸ்டி 4% என இருந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது எஸ்சி பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 15% மற்றும் எஸ்டி பிரிவிற்கு அளிக்கப்பட்டுள்ள 7.5 சதவிகித இடஒதுக்கீடு அங்கும் இன்னும் சரியாக பின்பற்றப்படவில்லை என்று சரியாக தெரிகிறது. 


அதிகரிக்கும் தற்கொலைகள்:


சென்னை ஐஐடியில் கடந்த 10 ஆண்டுகளில் 18 க்கும் மேற்பட்ட நபர்கள் தற்கொலை செய்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. அதற்கு மன உளைச்சல் மற்றும் அங்கு காட்டப்படும் சாதிய மற்றும் மதப் பாகுபாடுகள் முக்கியமான காரணங்களாக கருதப்படுகிறது. உதராணமாக 2019ஆம் ஆண்டு ஃபஹிமா லத்தீஃப் என்ற மாணவி அங்கு மதம் ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாக கூறி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 




அதேபோல் 2019ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சனா குமாரி என்ற பிஎச்டி மாணவி தற்கொலை செய்து கொண்டிருந்தார். அவருடைய மரணத்திற்கு அங்கு காட்டுப்பட்டு வந்த சாதிய பாகுபாடு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதேபோல் 2016ல் இரண்டு தற்கொலைகள், 2015ல் இரண்டு தற்கொலைகள் என சென்னை ஐஐடியில் தற்கொலைகள் நீண்ட நாட்களாக தொடரும் சம்பவமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அங்கு மாணவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் மற்றும் பாகுபாடுகளை சரி செய்ய நிர்வாகம் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: சாதி பாகுபாட்டை குறிப்பிட்டு, உதவி பேராசிரியர் ராஜினாமா: சென்னை ஐஐடியின் பதில் என்ன தெரியுமா?