சாதி பாகுபாடு மிகுந்திருப்பதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டு, ஐஐடி உதவிப் பேராசிரியர் ராஜினாமா செய்துள்ளார்.விபின் பி (Vipin P Veetil) சென்னை ஐஐடியில் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று, ஐஐடி தலைமைக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், "அரசியல் சிந்தாந்தம் மற்றும் பாலினத்தைத் தாண்டி அதிகாரதத்துவம் தான் பாகுபாட்டை உருவாக்குகிறது.   மேலும் அவர்,“ சாதி பாகுபாடு என்பது ஒரு அரிய நிகழ்வாகவே இங்கு பார்க்கப்படுகிறது. ஆனால், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பாதுக்கப்பு நிலை உண்மைக்கு வெகு தொலைவில் இருப்பது" என்றும் தெரிவித்தார்.     


”எஸ்சி,ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களின் நலன்களை உறுதி செய்ய சென்னை ஐஐடி ஒரு குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவில், பட்டியல்/பழங்குடி  சமூகத்தினருக்கான ஆணைய உறுப்பினர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணைய உறுப்பினர்கள், உளவியலாளர்கள் இடம்பெற வேண்டும். சாதி பாகுபாட்டை எதிர்கொண்டவர்கள் அனைவரும் குறைதீர்ப்பு குழு மற்றும் நீதிமன்றங்களில் புகார் அளிக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.    


Suicide In IIT | ”என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை” - ஐஐடி வளாகத்தில் இஸ்ரோ விஞ்ஞானி மகன் தற்கொலை..!


சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு நடைபெறுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என மாநில சிறுபான்மை நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்தியாவின் மிக சிறந்த மாணவர்கள் பயிலும் IIT-Madaras இல் சாதி வெறி என்பது பெரும் அவமானம், கல்வி என்பது பட்டங்கள் மட்டுமல்ல. அது ஒரு விசால பார்வை. விஞ்ஞான அணுகுமுறை. அதை தர முடியாத IIT இருந்தால் என்ன? அழிந்தால் என்ன?" என்று பதிவிட்டுள்ளார்.  


இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சென்னை ஐஐடி நிர்வாகம், முறையான புகார் அளித்தால் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.




இந்நிலையில், ஐஐடி வளாகத்தில் பணிபுரிந்து வந்த மற்றொரு ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் என்றும், சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் அசோசியட்டாக பணி புரிந்து வந்ததாகவும் கோட்டூர்புரம் காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த 10 ஆண்டுகளில் 14 மாணவர்கள் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அதேசமயம், நாடு முழுவதும் செயல்படும் எட்டு ஐஐடி கல்வி நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டில் 64 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு முன்னதாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்திருந்தது. 


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை ஐஐடியில்  முதுகலைப் படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மகளின் இறப்புக்கு சாதி - மத பாகுபாடே காரணம் என ஃபாத்திமா தந்தை குற்றம் சாட்டியிருந்தார்