தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியமும் சுகாதாரத்துறை வல்லுனர்கள், உயரதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அவ்வப்போது ஆய்வுகளையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சென்னையைப் போலவே கொரோனா பரவல் அதிகரித்துள்ள மதுரை, கோவை , சேலம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை புறப்பட்டு சென்றார்.


முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ”முதலமைச்சர் உத்தரவின்படி இன்று மதுரை  நாளை கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளேன். நேற்று முன்தினம் 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி தமிழகத்திற்கு வந்துள்ளது.




18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த  தமிழக அரசு ரூபாய் 46 கோடி ரூபாய் முன்பணம் செலுத்தியதில்,  முதற்கட்டமாக 15 லட்சம் டோஸ் தடுப்பூசி வரவேண்டியுள்ளது. அதில், நேற்று 5 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துள்ள நிலையில் , நாளை அல்லது நாளை மறுநாள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. ரெம்டெசிவர் மருந்து என்பது நோயாளியின் தொடக்க சிகிச்சைக்கு மட்டுமே பயன்படும் ஒரு மருந்தாகும். மத்திய அரசிடம் இருந்து 7 ஆயிரம் ரெம்டெசிவர் மருந்து மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தின் தேவையோ 20 ஆயிரம் என்பதால் தான் தட்டுப்பாடு நீடிக்கிறது. 


தனியார் மருத்துவனையினர் ரெம்டெசிவர் தேவையென பொய்யான தோற்றத்தை உருவாக்குவது வருத்தம் அளிக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் நோயாளிகளை பரிதவிக்க மருத்துவர்கள் விடக்கூடாது.


ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் என்பது தொடர்ச்சியாக தமிழகதிற்கு கிடைத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாது. மேலும்,100க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஆக்சிஜன் வசதி பொருத்தும் பணிகள், இன்னும் 4 நாட்களில் நிறைவடையும். அதன் பின்பு மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருக்கும் சூழ்நிலை தவிர்க்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்





மேலும், ”மோசமான சூழ்நிலையில் செல்லும் கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சளி இருமல் போன்றவற்றிற்கு மட்டும் சிகிச்சை செய்துவிட்டு, கட்டமைப்பு இல்லாத தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லாத போது அவர்களை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகள் தங்கள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும” என்று தெரிவித்துள்ளார்