நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி விளக்கமளித்துள்ளார்.


ஆளுநர் ரவி பேச்சு:


இதுதொடர்பாக பேசியுள்ள அவர் “நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை குறைத்து விடும். எனவே அது தொடர்பான மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன். நீட் தேர்வுக்கு கோச்சிங் செண்டர் சென்று பயில வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்தும்போது மாணவர்களை நிர் தேர்வுக்கு தயார் செய்யலாம்.  நீட் தேர்வுக்குப் பின்னரே மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் நீட் விலக்கு தொடர்பான மசோதாவ குடியரசு தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன்” என பேசியுள்ளார். நீட் இளைநிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உடன்  ஆளுநர் ரவி கலந்துரையாடினார். அப்போது நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சேலத்தை சேர்ந்த ஒரு மாணவரின் பெற்றோர் எழுப்பிய கேள்விக்கு, ஆளுநர் ரவி இவ்வாறு பதிலளித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு நேர் எதிராக ஆளுநர் தனது கருத்தை மீண்டும் பதிவு செய்துள்ளார்.


தமிழ்நாடு அரசு மசோதா:


திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது மிக முக்கியமானது. இதன் காரணமாக, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா, கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இம்மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டது.


அரசுடன் ஆளுநர் முரண்:


அந்த மசோதா குடியரசு தலைவரின் பரிந்துரைக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இம்மசோதா தொடர்பாக இரண்டு முறை  மத்திய அரசு விளக்கம் கேட்டு இருந்தது. நீட் மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு உள்ள அதிகாரம்என்ன? நீட் மசோதா மத்திய அரசின் அதிகார வரம்பில் வருகிறாதா?  என்பது போன்ற மத்திய அரசின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதில் அனுப்பி இருந்தது. 


அன்றே எதிர்த்த ஆளுநர்:


இதனிடையே, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் ரவி, ”நீட் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக சமமற்ற தளத்தை உருவாக்குகின்றன; அது தேவையற்றது என்பது அரசின் கருத்து என தமது உரையில் சுட்டிக்காட்டினார்.  அததொடர்ந்து, நீட் விலக்கு பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தமிழக அரசு கூறி வரும் நிலையில், நீட் விலக்கு மசோதாவில் என்றும் கையெழுத்திடமாட்டேன் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.