ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதாக திமுக மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.


முதலமைச்சர் ஸ்டாலின் நேர்காணல்:


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள் தொடர்பாக, திமுக எம்.பி. கனிமொழி பேசியிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவிற்கு திமுகவினர் இழைத்த கொடுமைகள் அனைவரும் அறிந்ததே. நீங்கள் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள் தொடர்பாக பேசலாமா என விமர்சித்து இருந்தார். இந்நிலையில் ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில், நிர்மலா சீதாராமனின் குற்றச்சட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.


ஜெயலலிதா தொடர்பான கேள்வி..!


நேர்காணலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுகையில், 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதாகக் கூறி, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகத் திமுகவை நேரடியாகத் தாக்கிப் பேசியிருப்பது தொடர்பாக உங்களின் பதில் என்ன என கேள்வி எழுப்பட்டது.


வாட்ஸ்-அப் செய்திகள்:


அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு அவர்கள் (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது. எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது, அவையைத் தவறாக வழிநடத்துவது” என விளக்கமளித்துள்ளார்.


எதிர்க்கட்சிகளின் தேர்தல் முகம்?


 எதிர்க்கட்சிகள் தங்களுடைய பிரதமர் முகம் யார் எனக் கூறித் தேர்தலை எதிர்கொள்ளுமா என்ற கேள்விக்கு, நரேந்திர மோடி என்ற பிம்பம் இன்று தகர்ந்துவிட்டது. எனவே, அவர் முகத்தை மட்டும் காட்டி பாஜகவால் வெற்றி பெற முடியாது. அதனால்தான் 39 கட்சிகளைக் கூட்டி வைத்து அவர் போஸ் கொடுத்தார். ஏன், அவர் தன் இமேஜை நம்பவில்லை? காங்கிரஸையும் ராகுலையும் தி.மு.க.வையும் மற்ற எதிர்க்கட்சிகளையும் மோடி விமர்சித்துப் பேசுவது இதனால்தான்” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.


பாஜகவின் நிலை:


பாஜக தமிழ்நாட்டின் மீது கவனம் செலுத்துவதைப் பிரதமரின் சமீபத்திய பேச்சுகளில் நன்கு காண முடிகிறது. மாநில அரசியலில் அ.தி.மு.க.வுக்குப் பதிலாக பா.ஜ.க உங்களது முதன்மை எதிர்க்கட்சியாக வர வாய்ப்புண்டா? இல்லை என்றால், ஏன் என்ற கேள்விக்குநல்ல நகைச்சுவையான செய்தி இது. பிரதமரிடம் எவ்வளவு பொய் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பிரதமருக்குத் தமிழ்நாட்டைப் பற்றியும் தெரியவில்லை. தமிழக பாஜகவைப் பற்றியும் தெரியவில்லை என நினைக்கிறேன்” என விளக்கமளித்துள்ளார்.