''தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இவரது பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. பல தரப்பட்ட அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் டோஷிலா உமாசங்கர் தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி குறித்து தோஷிலா உமாசங்கரிடம் பேசினேன்.
''இதுக்கு முன்னாடி அரசாங்கம் தொடர்பான நிகழ்ச்சிகள் நிறைய பண்ணியிருக்கேன். சென்னை கார்ப்பரேஷன் தொடர்பான நிகழ்ச்சிகள் நிறைய பண்ணியிருக்கேன். அம்மா அரங்கத்தில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். சினிமா சார்ந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளும் பண்ணியிருக்கேன். இருந்தும், தமிழக முதலமைச்சர் பதவியேற்பு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறது இதுதான் முதல் முறை. பதினைஞ்சு வருஷமா இந்த துறையில இருக்கேன். இப்போ, கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். இருந்தும், பதிவுயேற்பு விழாவை டைரக்ஷன் பண்ற டீமுக்கு, நான் கலைஞர் தொலைக்காட்சியில் வேலை செய்றது தெரியாது. நல்ல இயல்பா தமிழ் பேசக்கூடிய தொகுப்பாளினி வேணும்னு தேடுறப்போ என்னுடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டு இருக்கு. என்னோட வீடியோ பாத்துட்டு என்னை தொடர்பு கொண்டு பேசுனாங்க. அப்போதான் கலைஞர் தொலைக்காட்சியில் நான் வேலை பார்க்கிறேன்னு தெரிஞ்சிக்கிட்டாங்க.
எப்போவும் ஒரு நிகழ்ச்சியில தொகுத்து வழங்குறப்போ நம்ம சொல்ற விஷயத்தை முதல்ல நம்மலே பாலோ பண்ணனும்னு நினைப்பேன். இந்த வகையில இன்னைக்கு நடந்த நிகழ்ச்சியில சமூக இடைவெளியை பின்பற்றுங்க, கிருமி நாசினியை பயன்படுத்துங்கனு அறிவுறித்திட்டே இருக்குறப்போ நம்ம இதை மீற கூடாதுனு தமிழக முதல்வர் உட்பட யார்கிட்டயும் செல்ஃபி எடுக்கல. இதனால, நல்ல தொகுப்பாளரா மட்டும் இருந்து என்னோட வேலையை செஞ்சு முடிச்சேன். பெருமையா இருக்கு” என்கிறார்