சேலத்தில் கைத்தறியில் நெசவு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி அசத்திய நிகழ்வு, நெசவாளர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


சேலம் மாவட்டம் மேச்சேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நெசவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை நேரில் சந்திக்க மேச்சேரி வந்தார்.



அங்கு நெசவாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி இதனையடுத்து நெசவாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். கைத்தறியில் பட்டுச் சேலை நெய்வது குறித்து நெசவாளர்களிடம் கேட்டறிந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களைப் போல நெசவும் செய்து அசத்தினார். கைத்தறியில் பட்டுச் சேலையை நெசவாளர்கள் நெய்வது போல, அதைப் போலவே நெய்து காட்டிய ஆளுநரின் செயலால், அங்கிருந்த நெவாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நெசவாளர்கள் பட்டுச் சேலையை கைத்தறியில் உருவாக்க எத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது, தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகள் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து நெசவாளர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டறிந்தார்.


பின்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "மேச்சேரியில் நெசவாளர்களை சந்தித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது. நெசவாளர்கள் மீது பிரதமர் மோடி நெசவாளர்கள் மீது அக்கறை கொண்டுள்ளார். நெசவாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். கைத்தறி நெசவாளர்களின் திறமை மிகவும் வியப்பளிக்கிறது என்றார். 



சென்னை மழை பாதிப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று காலை மழை தொடங்கியுள்ளது. தற்போது அதிமாக பெய்து வருகிறது. எதிர்பார்த்ததை போல அடுத்த 2 நாளுக்கு மழைப் பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். அனைத்து விதமான சாத்தியமான வழிகளை அரசு செய்து வருகிறது. மழைப் பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.