புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு விளம்பர பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பேனரில் முதலமைச்சர் ரங்கசாமியின் படம் இடம் பெற்றுள்ளது.


தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு


தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த மாதம் 22-ம் தேதி கட்சியின் கொடி, பாடலை அறிமுகம் செய்தார். கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடிக்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார். பெருவாரியான வாக்காளர்களை கவரும் வகையில், கட்சியின் கொள்கைகள் அமைய வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.


இதற்கிடையே, மாநாடு நடத்துவதற்கு இடம் தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த விஜய், நிறைவாக விக்கிரவாண்டியை தேர்வு செய்தார். பல்வேறு நிபந்தனைகளுடன் வரும் 27 ஆம் தேதி மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து, கடந்த 4 ஆம் தேதி பந்தல்கால் நடும் நிகழ்வுடன் விஜயின் மாநாட்டு பணிகள் தொடங்கின. தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் பலரும் பல்வேறு இடங்களிலும் மாநாட்டை வரவேற்றும், அதை நடத்தும் கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யை வரவேற்றும் தற்போது சுவர் விளம்பரங்களை வரையும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


த.வெ.க பேனரில் முதலமைச்சர் ரங்கசாமியின் படம்


இந்நிலையில், புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு விளம்பர பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பேனரில் முதலமைச்சர் ரங்கசாமியின் படம் இடம் பெற்றுள்ளது. "2026-ல் ஆளப்போறான் தமிழன்" என்ற வாசகத்துடன் தமிழக வெற்றி கழக முதல் மாநில மாநாடு... தளபதி விஜய் அழைக்கிறார் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.



வேட்டி சட்டையில் விஜய் நடந்து வருவது போன்றும் மறுபுறம் முதலமைச்சர் என்ற பெயர் பலகையின் கீழ் விஜய் பேசுவது போல படம் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பர பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா நிர்வாகிகள் மத்தியில் இந்த பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்க 27 குழுக்கள்


தமிழக வெற்றிக் கழக மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்க 27 குழுக்களை அக்கட்சி அமைத்துள்ளது. அதன்படி, பொருளாதாரக் குழு, சட்ட நிபுணர்கள் குழு, வரவேற்புக் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரக்குழுவில் 56 பேரும், மாநாட்டிற்கான போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் குழுவில் 104 பேரும் இடம்பெற்றுள்ளனர். இவற்றுடன், தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.