சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் உள்ளது. இதில் 7 ஊராட்சிகள் சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குள் அடங்குகிறது. இந்த நிலையில் ஊராட்சி ஒன்றியம் மூலம் நடைபெற்று வரும் சாலை அமைத்தல், சாக்கடை அமைப்பது போன்ற திட்ட பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் புகார்கள் தெரிவித்துள்ளனர்.


தர்ணா:


இது குறித்து சேலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் யாரும் இல்லாததால் திடீரென அலுவலக வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் பாமக நிர்வாகிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். 



சேலம் ஊராட்சி ஒன்றியம் மூலம் நடைபெற்று வரும் பணிகளின் தரம் குறித்து தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், தரமற்ற முறையில் நடைபெற்று வரும் பணிகளை கண்டறிந்து சீரமைக்க வேண்டும் எனவும் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் வலியுறுத்தி உள்ளார். மேலும் ஒன்றிய குழு தலைவர் 18 முதல் 21 சதவீதம் வரை கமிஷன் பெற்றுக்கொண்டு டெண்டர் விடுவதால் ஒப்பந்ததாரர்கள் தரமற்ற முறையில் திட்ட பணிகளை செயல்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.


இது குறித்த தகவலறிந்து வந்த இரும்பாலை காவல்துறையினர் சட்டமன்ற உறுப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தர்ணாவை தொடர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனிடையே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அருள் அதிகாரிகள் வந்தவுடன் சரமாரியான கேள்விகளை முன் வைத்தார். இதுகுறித்து பேசுவதற்கு வருவதாக நேற்று தகவல் தெரிவித்த நிலையில், வேண்டுமென்று அதிகாரிகள் தாமதமாக வருவதாக கேள்வி எழுப்பினர். அதிகாரிகள் வாங்கும் 21 சதவீதம் கமிஷனில் பங்கு வாங்க வரவில்லை, மக்கள் பிரச்சனை குறித்து பேச வந்துள்ளேன். மேலும் எனது தாயின் மீது சத்தியமாக நான் பங்கு வாங்கவில்லை, ஆனால் என்னையும் சேர்த்து பொதுமக்கள் திட்டுகின்றனர் என்றும் சட்டமன்ற உறுப்பினர் பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது.



கிழித்தெறியப்பட்ட மனுக்கள்:


மேலும் அடுக்கடுக்கான கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்த நிலையில், பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர். மனு அளிக்க வந்த நிலையில் நீண்ட நேரமாக காக்க வைத்ததால் ஆத்திரத்தில் மனுவை சட்டமன்ற உறுப்பினர் அருள் கிழித்தெறிந்தார். நடந்து முடிந்த திட்டப்பணிகள் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார். இதற்கு அதிகாரிகள் ஒருவார காலம் அவகாசம் கேட்டுள்ளனர். அதற்குள் பட்டியலை தயார் செய்து ஆய்வுக்கு செல்லும்போது அழைக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளனர். தண்ணீர் குழாய் அமைப்பதற்கு லஞ்சம் அதிகளவில் கேட்பதால் அதைக் கேட்க வேண்டாம் என்று அதிகாரியிடம் கூறிக்கொண்டு புறப்பட்டு சென்றார்.