மாஞ்சோலை படுகொலை குறித்து ஊடகங்களில் செய்திகள் ஏராளமாக இருந்தாலும், ஜூலை 23ஆம் தேதி வரும்போது அது குறித்த நினைவூட்டலை இந்த சமூகத்திற்கு ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. எளிய மக்களின் போராட்டத்தை துப்பாக்கி கொண்டு ஒரு அரசு ஒடுக்கிய அதிகார வன்முறை அரங்கேறி இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகிறது.
போராட்டத்தின் துவக்கம்
1998ஆம் ஆண்டுதான் இந்த போராட்டம் துவங்குகிறது. ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட 22 கோரிக்கைகளை மையப்படுத்தி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தொடங்கிய உரிமைக்கான போராட்டம் தான் மாஞ்சோலை போராட்டம். துவக்கத்தில் சிலர் வேலைக்கு செல்வதும், வேலை நேரம் முடிந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதுமாக போராட்டத்தை அறத்துடனே தொடங்கியுள்ளனர். இதனை சகித்துக்கொள்ளாத எஸ்டேட் நிர்வாகம் போராட்டத்தை வழிநடத்தியவர்களின் பணி இடத்தை மாற்றியது. ஆனாலும் போராட்டம் நிற்கவில்லை.
1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை தடியடி நடத்தி கலைத்ததுடன் அன்று இரவோடு இரவாக தேயிலை எஸ்டேட்டில் நிர்வாகம் கொடுத்த வீட்டில் இருந்த 76 தொழிலாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தது. காவல்துறை கைது செய்யும்போது அங்கிருந்து தப்பித்தவர்கள் மலைப்பாதை வழியாக கீழ் இறங்கி, அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றனர். இதற்கிடையில் எஸ்டேட் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த ரேசன் பொருட்களை நிறுத்தியது. அரசு பேருந்து உள்ளிட்ட மாஞ்சோலைக்கான போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தியது. இதனால் மாஞ்சோலையில் இருந்த மக்கள் உணவு இல்லாமலும், கீழ் இறங்க முடியாமலும் தவித்தனர்.
அரசியல் கட்சிகளின் ஆதரவு
இதையடுத்து புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு தொழிலாளர்களுக்கு சிறு நம்பிக்கையை ஏற்படுத்த தொழிலாளர்கள் மாஞ்சோலையில் இருந்து கீழ் இறங்கி திருநெல்வேலியில் போராட்டம் நடத்தினர். 1999ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும், அடுத்த நாள் கணவர்களை விடுவிக்ககோரி போராடிய பெண்களையும் கைது செய்தது காவல் துறை. மொத்தம் 652 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு
இதன் பின்னர் ஜூலை 23ஆம் தேதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று மனு கொடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் காவல் துறை அவர்களை மறிக்கவே, மக்கள் சாலையில் அமர்ந்தனர். வெயில் தாங்க முடியாமல் மக்கள் தாங்கள் அணிந்து வந்த காலணிகளின் மேல் அமர்ந்தனர். களத்திற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அன்றைக்கு தமிழ் மாநில காங்கிரஸில் இருந்த இன்றைய தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் வந்தனர். அதன் பின்னரும் காவல்துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல அனுமதிக்காததால், தாமிரபரணி ஆற்றில் இறங்கி மாற்றுப்பதையில் செல்ல திட்டமிட்டது போராட்டக்குழு.
வெறியாட்டம் போட்ட காவல்துறை
ஆனால் அதற்குள் காவல்துறை மக்கள் மீது தடியடியைத் துவக்கியது. அதைத்தொடர்ந்து கற்கள் சரமாரியாக வீசப்பட்டது. காக்கிச் சட்டைகள் வசம் இருந்த துப்பாக்கிகள் வானத்தை நோக்கியும் மக்களை நோக்கியும் சுட்டது. உயிருக்கு பயந்த மக்கள் தாமிரபரணி ஆற்றில் குதித்தனர். ஆனால் அவர்களை விடாத காவல்துறை ஆற்றின் மறுபக்கத்துக்கும் சென்று ஆற்றில் இருந்து வெளியேறியவர்கள் மீது சராமாரியாக தடியடி நடத்தியது. ஆற்றில் இருந்தவர்களை தொடர்ந்து லத்தியால் அடித்ததால், ஆற்றில் இருந்து வெளியேற முடியாமல் ஆற்றிலேயே தத்தளித்தனர் மக்கள்.
கொடி பிடிப்பயா? கோஷம் போடுவயா?
ஆண்கள் பெண்கள் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் காவல்துறை சராமாரியாக தாக்கியது. ஆற்றில் இருந்து வெளியேறி அருகில் இருந்த கிராமங்களில் தஞ்சம் அடைந்தவர்களை உடையில் இருந்த ஈரத்தை வைத்து அடையாளம் கண்டு அவர்களையும் கண்மூடித்தனமாக தாக்கியது காவல்துறை. காவல் துறை தாக்கும்போது “கொடி பிடிப்பயா? கோஷம் போடுவயா?” எனவும் மிகவும் மோசமான வார்த்தைகளுடன் பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்து, ஆள் உயரக் கம்பால் கண்மூடித்தனமாக தாக்கி, வெறி கொண்டு கற்களை வீசி, துப்பாக்கியால் சுட்டு, ஆற்றில் குதித்தவர்களை வெளியே வரவிடாமல் ஆற்றில் மூழ்கடித்து, பெண்களின் சேலைகளை கிழித்து மானபங்கம் செய்து, காவல் துறையின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்களை தாமிரபரணியில் தூக்கி வீசியது என இதனால் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 17 பேர். அதில் 16 பேர் உடலில் பலத்த காயங்கள் இருந்தது. ஒரு சடலத்தில் மட்டும் காயம் எதுவும் இல்லை, காயமில்லாத சடலம் விக்னேஷ் என பெயர் கொண்ட ஒரு வயது குழந்தையுடையது.
17 பேர் படுகொலை
17 சடலத்தையும் கூராய்வு செய்த மருத்துவர்கள் காவல்துறை தாக்கியதால் இறக்கவில்லை, நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் என்றது. உயிருக்கு ஆபத்தான அளவில் காயப்படுத்தப்படுத்தப்பட்டவர்களால் எப்படி நீந்த முடியும்? 17 பேர் என்பது அரசு கூறிய கணக்கு. இந்த வன்முறைக்குப் பின்னர் பலர் இன்றுவரை காணவில்லை. தாமிரபரணியின் இழுவையில் இழுத்துச்செல்லப்பட்டது எத்தனை பேர் என்பது இப்போதுவரை கேள்விக்குறிதான்.
துப்பாக்கியால் சுடப்பட்ட இளைஞரின் உடலை காவல்துறை வல்லநாட்டு மலையில் வைத்து எரித்தது குறித்து போராட்டக் களத்தில் இருந்த அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். இந்த கலவரத்தை காவல் துறையின் காட்டுமிராண்டிதனத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கொல்லப்பட்ட 17 பேரில் 5 பேரின் உறவினர்கள் மட்டும் உடலைப் பெற்றுக்கொண்டனர். மற்ற 11 பேரின் உடலை காவல்துறையே எரித்துவிட்டது.
முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் பதில்
இந்த போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டாலும் புதிய தமிழகம் கட்சியினர் அதிகம் கலந்து கொண்டனர். அரசு உத்தரவு போட்டிருந்தாலும் தலித் மக்களின் போராட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாத சாதிய எண்ணம் கொண்ட அதிகாரிகளின் அப்பட்டமான வெறியும் இந்த அரச வன்முறையில் அரங்கேறியது என இந்த வன்முறை தொடர்பாக வெளியான ஆணவப் படத்தில் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அன்றைக்கு தமிழ் மாநில காங்கிரஸில் இருந்த அப்பாவு கூறியதாவது, “மக்கள் புதிய தமிழகம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் பக்கம் வந்த பின்னர் தலித் ஓட்டுகள் கிடைக்காது என்ற காழ்ப்புணர்ச்சியால் கலைஞர் திட்டமிட்டு தகராறு செய்யுங்கள் எனக்கூறியதன் பேரில் காவல்துறை இவ்வாறு செய்துள்ளது. வன்முறைக்குப் பின்னர் முதலமைச்சர் கலைஞரிடம் பேசுகையில், சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் பின்னர் மாவட்ட ஆட்சியர், டி.ஐ.ஜி, டி.சி ஆகியோர் எங்கள் தவறுதான் என மன்னித்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். அதிகாரிகள் தவறான தகவலை கொடுத்துதான் உங்களை திசை திருப்பிக்கொண்டுள்ளனர். பம்பாய் முதலாளிக்காக நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்” என கூறியுள்ளார்.
மேலும் அந்த ஆவணப் படத்தில், தவறு செய்த அதிகாரிகளை மாற்ற வேண்டும் என நாங்கள் கூறிய போது கருணாநிதி, அதிகாரிகளை மாற்றினால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கொதிப்படைந்து விடுவார்கள் என பதில் அளித்தார். தவறு செய்த அதிகாரிகளை சாதி பார்த்துதான் நடவடிக்கை எடுக்க முடியுமா? இந்த வயதில் இவ்வளவு சின்னப்புத்தி அவருக்கு வரலாமா? என அப்பாவு அந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.
இன்றைய நிலவரம்
1998ஆம் ஆண்டு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கூலி ரூபாய் 49. போராட்டத்திற்குப் பின்னர் உயர்த்தப்பட்ட கூலி அதன் பின்னர் ரூபாய் 5, ரூபாய் 10 என உயர்த்தப்பட்டு இன்றைக்கு ரூபாய் 410 கூலி வழங்கப்படுக்கிறது. மாஞ்சோலை மக்கள் தேயிலை தொழிலை மட்டுமே செய்வதால் அங்கிருந்து வெளியேறிய பின்னர் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.
கூலி உயர்வு கேட்டு ஒரு தனியார் நிறுவன ஊழியர்கள் போராடுகிறார்கள். போராட்டத்திற்கு எதிராக அரசு காவல்துறையை வைத்து வன்முறையை கட்டவிழ்த்து கொலை செய்கிறது. அன்றைய தினத்தில் அரசு வன்முறையை நடத்தாமல் இருந்திருந்தால் அந்த ஒருவயது குழந்தை விக்னேஷ் 25 வயது இளைஞனாக வளர்ந்திருப்பார். மாஞ்சோலை அரச வன்முறை ஏதோ ஆங்கிலேயர்கள் வெளியேற்றப்பட்ட இந்தியாவில் நடைபெற்ற முதலும் கடைசியுமான அரச வன்முறை இல்லை. அதன் பின்னரும் நடந்துள்ளது. இன்னும் நடக்குமோ என்ற அச்சம் இதுபோன்ற நிகழ்வுகளை நினைக்கும்போது ஏற்படுகிறது. ஆனாலும் உரிமைக்கான குரல் இங்கு அதிகமாகிக்கொண்டே இருப்பது பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவைத் தருகிறது.