மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை ரேஷன் கார்டு இல்லாதவர்கள் எப்படி பெறலாம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல்  தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயலால் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கிட்டதட்ட 24 மணி நேரம் தொடர்ச்சியாக சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் குறிப்பாக சென்னையின் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. 


இதனிடையே மீட்பு பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். அதேசமயம் மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டது. 


அதன்படி புயல் பாதித்த மாவட்டங்களில் ரேஷன் அட்டைவைத்திருப்பவருக்கு இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் இங்குள்ள முகவரியில் ரேஷன் கார்டு இல்லாமல் உள்ளனர். இவர்களில் குறிப்பிட்டவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது. இவர்கள் அனைவருமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


இதனிடையே ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு வேளச்சேரியில் உள்ள அஷ்டலட்சுமி நகர் ரேஷன் கடையில் தொடங்கி வைக்கிறார். முன்னதாக நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன்களும் விநியோகம் செய்யப்பட்டது. இப்படியான நிலையில் தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டோக்கன் கிடைக்காதவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ஆகியோர் வெள்ள நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் ரேஷன் கடைகளில் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 


இதற்காக ரேஷன் கடைகளில் இன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நிவாரண தொகைக்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள நிவாரண தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு 044-28592828 மற்றும் 1100 என்ற இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதுன் குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: CM Stalin: ’இன்று காலை 10 மணி முதல் தொடக்கம்’ - மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..!