வழக்கமாக புதிய ஆண்டின் முதல் மாதத்தில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெறும். 2022ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.
முதல் கூட்டம் என்பதால் முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும். ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு, சட்டப்பேரவை நடைபெறவுள்ள கலைவாணர் அரங்கிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருவார். அவரை சட்டப்பேரவையின் சபாநாயகரான அப்பாவு, வரவேற்று பேரவைக்குள் அழைத்து செல்வார்.
பின்னர் ஆளுநர் தன் கையோடு கொண்டுவந்திருக்கும் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிக்கத் தொடங்குவார். தமிழக அரசு முன் கூட்டியே தயாரித்துக் கொடுக்கும் அறிக்கையைதான் ஆளுநர் தனது உரையாக படிப்பது மரபாக உள்ளது. அதில் தேவையேற்பட்டால் சிறு மாற்றங்களை ஆளுநர் செய்துக்கொள்ளலாமே தவிர, அவரே ஒரு உரையை தயாரித்து வந்து படிக்க முடியாது.
ஆளுநர் ரவிக்கு தமிழ் தெரியாது என்பதால் தனது உரையை அவர் ஆங்கிலத்தில் வாசிப்பார். அவர் படித்து முடித்ததும், அந்த உரையை அப்படியே தமிழாக்கம் செய்து சபாநாயகர் அப்பாவு படிப்பார். பொதுவாக, ஆளுநர் உரையில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு, புதிய திட்டங்கள் அறிவிப்பு, முக்கியமான தீர்மானங்கள் கொண்டுவருவது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரைபோலவே, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவியும் தன்னுடைய முதல் உரையை வாசிக்கவிருப்பதால் அவர் என்னச் சொல்லி தனது பேச்சை தொடங்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலினோடு ஆர்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழா ஒன்றில், சிறப்பாக செயலாற்றக் கூடியவர் மு.க.ஸ்டாலின் என்று தனது பேச்சை ஆளுநர் தொடங்கியது.
ஆளுநர் உரையில், சித்திரை 1ஆம் தேதிக்கு பதிலாக, மீண்டும் தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல், சென்னையில் மழை காலத்தின்போது தண்ணீர் தேங்குவதை தடுக்க, நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்துவது, ஆக்கிரமிப்புகளை அடியோடு அகற்றது தொடர்பான அறிவிப்பும் இடம் பெறும் என கூறப்படுகிறது. மேலும், தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகவும் ஆளுநர் உரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஆட்சி அமைந்ததும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு, தற்போது ஏற்பட்டுவரும் ஒமைக்கிரான் பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநர் பேசவுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் உரை முடிந்த பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரை கொண்ட அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கி, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வர்.
அதன்படி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, எதிர்கட்சியினர், ஆளுங்கட்சியினர் பேச வாய்ப்பளிக்கப்படும், இறுதி நாளில் எதிர்கட்சிகளின் கேள்விகள், குறைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிலுரையின் மூலம் பதில் கொடுப்பார். முதல்வரின் பதிலுரையிலும் முக்கியமான அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன. ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருப்பதால் இந்த கூட்டத் தொடரை அதிக நாட்கள் நடத்தாமல் 2 நாட்களிலேயே முடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
Also Read | TN Assembly Session 2022 LIVE: சட்டமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் நேரலை ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு திட்டம்