கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த மாதம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. தொடர்ந்து, பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உயிரியல் பூங்காவில் உள்ள 5 சிங்கங்களுக்கு கடந்த மே 26 ஆம் தேதி இருமல் உள்ளிட்ட உடல் நலக் குறைபாடுகள் தென்பட்டதை அதிகாரிகள் கவனித்தனர். இதனையடுத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக நிபுணர்கள் அழைக்கப்பட்டு 11 சிங்கங்களின் சளி மாதிரிகளை சேகரித்து சோதனை செய்தனர். இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கடந்த 3ஆம் தேதி மாலை 9 வயது நீலா என்கிற பெண் சிங்கம் உயிரிழந்தது. உயிரிழந்த பெண் சிங்கம் தொடக்கத்தில் எந்த அறிகுறியும் உடல் நலக் குறைவும் இல்லாமல் தான் இருந்துள்ளது. இறப்பதற்கு ஒரு நாள் முன்பு தான் அதற்கு சளித்தொல்லை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென இறந்து விட்டது. மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் சிங்கம் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தொடர்பாக பேசிய இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஜலாலூதீன், "வண்டலூரில் உயிரியல் பூங்காவில் விலங்குகளை நன்றாக பராமரித்து வருகிறார்கள். ஏதொவொரு அஜாக்கிரதை காரணமாக சிங்கங்களுக்கு தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக செய்யாததே காரணம்.
விலங்குகளுக்கு மாமிசங்கள் கொடுப்பவர்கள் கைகளில் தான் அள்ளிப் போடுவது வழக்கம். இதன் மூலம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம். விலங்குகளை பராமரிப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் மூலம் பரவியிருக்கவும் வாய்ப்புள்ளது. ஒரு விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், மற்ற விலங்குகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இதற்கு ரஷ்யாவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மருந்தை இறக்குமதி செய்து விலங்குகளுக்கு தர வேண்டும். தொற்றுகள் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு வரும். மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் தொற்று ஏற்படும். முறையாக கண்காணித்து மற்ற விலங்குகளுக்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். கொரோனா தொற்று பரவி உள்ளதா என்பதை அறிய சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். பூங்கா ஊழியர்களையும் பரிசோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும். விலங்குகளை கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு தலைவர் முகமது சலீம் கூறுகையில், "சிங்கம் ஒரு அரிய விலங்கு. சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதும், ஒரு பெண் சிங்கம் உயிரிழந்து இருப்பதும் சங்கடமான விஷயம். மற்ற 8 சிங்கங்களையும் காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சிங்கங்களை மத்திய பிரதேச மாநிலத்திற்கு இட மாற்றம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2013 ம் ஆண்டு உத்தரவிட்டது. சில அரசியல்வாதிகளின் சுயநலம் காரணமாக இடமாற்றம் செய்யாமல் வைத்துள்ளனர். குஜராத் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், இந்தியாவில் சிங்கங்களை பார்க்க முடியாத நிலை ஏற்படும். வண்டலூரில் சிங்கங்களில் இருந்து மற்ற விலங்குகளுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. மற்ற விலங்குகளுக்கு பரவாமல் இருக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விலங்குகளை பராமரிப்பவர்களுக்கு பிபிஇ கிட் வழங்க வேண்டும்.
விலங்குகளிடம் கொரோனா போன்ற வைரஸ் தொற்றுகள் இருக்கும். காடழிப்பு, விலங்குகளின் வாழ்விடம் ஆக்கிரமிப்பு, மேய்ச்சல் பகுதி குறைதல் உள்ளிட்ட காரணங்களால் வெளியே வரும் விலங்குகளால் தொற்றுகள் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதேகாரணங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் விலங்குகளுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மனிதர்கள் நன்றாக இருக்க காடு நன்றாக இருக்க வேண்டும். இல்லையெனில் காட்டின் அழிவு மனித அழிவின் துவக்கமாக இருக்கும்" என அவர் தெரிவித்தார்.