நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்டு மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொரோனா இரண்டாம் அலைப்பரவலில் அரசின் செயல்பாடு, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு,


மழைக்கால கூட்டத்தொடரின் போது 31 மசோதாக்களை நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் 19 நாட்களில் எப்படி விவாதிக்க முடியும் என கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கான நேரம் குறைக்கப்படுவதாக கூறிய டி.ஆர்.பாலு, பொருளாதாரத்திலும் வேலை வாய்ப்பிலும் கொரோனா தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, இந்தோ- சீனா எல்லை பிரச்னைகள் உள்ளிட்ட 13 பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்க கோரி மனு அளித்துள்ளதாக டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.



மேலும் காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி தரப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்த அதே வேளையில் அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இது போன்ற செயல்பாடுகள் மூலம் மத்திய அரசை எப்படி நம்பமுடியும் என கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு, மேதாது அணை குறித்து நாடாளுமன்றத்தில் பேச உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக அமைச்சர்களிடம் ஒரு மாதிரியும், கர்நாடக அமைச்சர்களிடம் வேறு மாதிரியும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செக்காவத் பேசுவதாகவும், மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு, மருத்துவப்படிப்பிற்கான தேசிய இடங்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.


மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கண்டுகொள்வதே கிடையாது என்ற அவர், இந்த தீர்மானங்களுக்கு நாள் ஒன்றை குறிப்பட்டு மத்திய அமைச்சர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும், ஆனால் அதனை மத்திய அமைச்சர்கள் யாரும் தெரிவிப்பதில்லை என்றும் கூறிய டி.ஆர்.பாலு, நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதிலளிக்க பயப்படுகிறார்களா? என கேள்வி எழுப்பினார். விவசாயிகள் போராட்டம், ஜி.எஸ்.டி வருவாய் மாநிலங்களுக்கு கிடைக்காதது, நியூட்ரினோ பிரச்னை, சமூக செயற்பாட்டாலர் ஸ்டேன் சுவாமி மரணம் உள்ளிட்டவை குறித்தும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பேச திட்டமிட்டுள்ளதாகவும் டி.ஆர்.பாலு கூறினார்