பன்முகச் சிக்கல்கள் உச்சத்தை எட்டியிருந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் திரு. மு. க ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு, பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.  பதவி ஏற்றது முதல் திரு மு க ஸ்டாலினின் ஒவ்வொரு அசைவும் தேசிய அளவில் அனைவரையுமே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.



தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்


பிரமிக்கத்தக்க உழைப்பு.. வேகம் ஆகியவை பலராலும் வியந்து பாராட்டப்படுகிறது. ஒன்றிய அரசு என்ற  வார்த்தையை அழுத்தம் திருத்தமாக முதலமைச்சர் பயன்படுத்துவதை, தி.மு.கவின் கொள்கை பிரகடனத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். இதேபோல மாநில சுயாட்சி, மொழிப்பற்று, இன உரிமை, சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகிய அடித்தளங்களை வலுவாக்கும் முயற்சியை அவர் சபதமாக ஏற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.



ஒன்றிய அரசு என்பது மட்டுமின்றி, இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய கருத்தியல்கள். அனைத்து சமூகத்தினர் - அனைத்துப் பிரிவினர் - அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் ’திராவிட மாடல்’ என்ற அறிவிப்பு இவையெல்லாம் அனைவருக்குமான அரசாக இது செயல்பட விரும்புவதைக் காட்டுகிறது. அதனால்தான் சட்டசபையில் பேசும்போது நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா.. பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர்.. முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சி நான்.. என்ற வரலாற்றுத் தொடர்ச்சி பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.


இதை நினைவில் கொண்டுதான், ஸ்டாலின் தன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார். மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி ஒட்டுமொத்த ஜனநாயக மதிப்பீடுகளையும் மதிக்காமல் செயல்படுகிறது. அதன் ஒற்றைக் கலாச்சாரம்.. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்விமுறை போன்ற முழக்கங்கள் பன்முகத் தன்மைக்கு சவாலாக உருவாகியுள்ளன. இந்தப் போக்குக்கு கடிவாளம் இடும் மாற்றுச் சொல்லாடல்களாக ஒன்றிய அரசு, திராவிட மாடல் போன்ற கருத்தாக்கங்களை முன்னெடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வியூகம், அவரது 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. வெறும் சித்தாந்த முழக்கங்கள் மட்டுமின்றி, அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் முதலமைச்சர் இறங்கியுள்ளார். இன்றைய தேவை ஒரு வெளிப்படையான நிர்வாகம். வெள்ளை அறிக்கை வெளியிடுதல் அதன் ஒரு முகம். அனைத்து சட்டப் பேரவைக் கட்சிக் கூட்டம் ஜனநாயக குணத்தின் மற்றொரு சாட்சியம். உயர்கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழகத்தின் உடனடித்தேவை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் பொருளாதார வளர்ச்சி. இதை மனதில் கொண்டு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார் முதலமைச்சர். ஐவர் குழுவின் உறுப்பினர்களாக எஸ்தர் டாப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் டிரீஸ், நாராயணன் உள்ளனர். இந்த நியமனம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.


தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதரும் மகிழும் வகையில், எமது அரசு என்று சொல்லி, அனைவரும் பெருமைப்படும் வகையில், இந்த அரசு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என அந்த குழுவினருடன்  ஆலோசனையின் போது முதலமைச்சர் தன் கனவை அறிவித்தார். அந்தக் கனவு நனவாக வேண்டியது இந்த மாநிலத்தின் மலர்ச்சிக்கு அவசியம். இந்தக் குழு மட்டுமின்றி, மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியதாக அமைந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பதவி ஏற்ற போது கொரோனா தொற்று  உச்சத்தில் இருந்தது. படுக்கைப் பற்றாக்குறை.. ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. போன்ற நெருக்கடிகள் அச்சுறுத்தின. ஒருநாள் தொற்று எண்ணிக்கை 36,000.. பலர் உயிரிழப்பு.. இவையெல்லாம் அந்த அச்ச உணர்வை அதிகரித்தன. இத்தகைய நெருக்கடியில் கோவைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் கவச உடை அணிந்து கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளைச் சந்தித்தார். இது பெரிய வரவேற்பையும் ஆறுதலையும் ஏற்படுத்தியது. சிலரோ, முதலில் முதலமைச்சரது பாதுகாப்பு முக்கியம் என்று கவலை தெரிவித்தனர். கொரோனா நிலைமையை சமாளிக்க தமிழக அரசு நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டது. 


நீண்டகால அடிப்படையில் முன்னேற்றம் என்பது தேவையானது. அதற்காக உடனடி தேவையை மறந்துவிட முடியாது. பதவியேற்ற முதல் நாளிலேயே ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக தலா ரூபாய் 2000, ஆவின் பால் விலை ரூபாய் மூன்று குறைப்பு, உழைக்கும் பெண்கள்.. திருநங்கைகள் இலவச பஸ் பயணத்திற்கு அனுமதி, கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை.. மக்கள் குறைதீர்க்கும் துறைக்கு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் ஆகியவை உடனடி நிவாரணங்கள்.  சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கொரோனா நெருக்கடியால் பெரிய பாதிப்பை சந்தித்தன. இந்தத் தொழில் பிரிவினர் தங்கள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் தர வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்த முதலமைச்சர் இந்த கோரிக்கைக்கு ஆதரவு கேட்டு 12 மாநிலங்களுக்குக் கடிதம் எழுதினார். இதற்கு முன்பு 18 முதல் 45 வயதினருக்கான தடுப்பூசியை மாநில அரசுகளே கொள்முதல் செய்து போட வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்று பா.ஜ.க. அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார்.


ஒன்றிய அரசின் தரப்பில் கூட்டுறவு, கூட்டாட்சி என்று வாய் ஜாலம் காட்டப்பட்டாலும், மாநிலங்கள் நடத்தப்படும் விதம் கவலை தரக்கூடியது. ஆட்சியில் உள்ள ஒன்றிய அரசிடம் உள்ள அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை. அந்த லட்சியத்தை அடைய தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துவரும் இத்தகைய கூட்டு முயற்சிகள்.. அணுகுமுறை தொடர வேண்டும். மொழி உரிமை, நீட் போன்ற பிரச்சினைகளில் ஒத்த கருத்துடைய எதிர்க் கட்சிகளை அணிதிரட்டி வரும் முதலமைச்சர், அதனை இன்னும் தீவிரப்படுத்துவார் என்பதில் ஐயமில்லை. சமூகவலைத்தள யுகமான சமகால அரசியல் களத்தில், முன்னெப்போதும் சந்தித்திராத அரசியல் சவால்களை சளைக்காமல் முறியடித்து முன்னேறும் அவரது திட்பமும், தீவிரமும் அந்த உறுதியை நமக்குத் தருவதாக உள்ளது.






சிக்கலான காலக்கட்டத்தில் பதவிக்கு வந்திருந்தாலும், நல்லாட்சி என்ற பெயரை ஒரு பக்கமும், கொள்கையில் உறுதி என்ற மதிப்பீட்டை மற்றொரு பக்கமும் பெறுவதற்கான லாவகத்துடன் ஆட்சித் தேரை அனாயசமாக நடத்திச் செல்கிறார் ஸ்டாலின். குறைவான பேச்சும், நிறைவான செயல்பாட்டையும் கொண்ட காலத்திற்கேற்ற புதிய அரசியல் பாணியை அவர் கடைப்பிடித்து வருகிறார். திராவிட மாடல் என்ற ஆட்சிமுறையை முன்வைக்கும் முதலமைச்சரின் இந்த அணுகுமுறையை ‘ஸ்டாலின் மாடல்’ என்றே அழைக்கலாம்! அந்த அளவிற்கு தற்கால மாற்றங்களுக்கேற்ப தன்னையும், தனது செயல்பாடுகளையும் அவர் தகவமைத்துக் கொண்டிருக்கிறார்.    


முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர்  மேற்கொண்ட முதல் புதுதில்லிப் பயணத்தில், பிரதமரைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், அடுத்த நாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியையும்  சந்திக்கத் தவறவில்லை. பிரதமருடனான சந்திப்பு மனநிறைவைத் தந்தது என்றார். மத்திய அரசுடன் உறவு குறித்து கேட்டபோது உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தி.மு.க.வின் கொள்கை நிலைப்பாட்டைச் சொன்னார். அதே சமயத்தில் உறவுக்கு கை கொடுத்ததால் ஏற்பட்ட நன்மை, தீமைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய காலம் இது.


இந்த ஆட்சிக்கு நெருக்கடி தர விரும்புபவர்கள் நிறைய முகாம்களில் உள்ளனர். இந்தச் சவாலைச் சந்திக்கும் துணிவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உள்ளது. அதனால்தான் தி.மு.கழகம் அடக்க முடியாத ஒரு யானை என்று பெருமைபட முதலமைச்சர் கூறியுள்ளார். திமுக அடக்க முடியாத யானையாக, மாபெரும் சக்தியாக வளர கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது, அந்த இயக்கத்தையும் தாண்டிய பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவே நிலவி வருகிறது.


பெரும்பணம் கோலோச்சும் தேர்தல் அரசியல், பல ஆபத்துகளை விளைவிக்ககக் கூடும். அதைச் சந்திப்பதற்கான கொள்கை வலிமையும், கோட்பாட்டு உறுதியும் தி.மு.கழகத்திற்கும், அதன் தலைவருக்கும் நிறையவே இருப்பதை, அண்மைக்கால நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இதே உறுதிப்பாட்டுடனும், உத்வேகத்துடனும் இந்த ஆட்சி பயணிக்கும் நிலையில், பல சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.


வெளிப்படைத்தன்மையும், சித்தாந்த உறுதியும் இரு கண்களாக இருந்து ஆட்சியை வழிநடத்த வேண்டும். தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்க வேண்டும். புதிய வரலாறு படைக்க வேண்டும். மு.க.ஸ்டாலினின் சீரிய தலைமை இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தும் என்ற நம்பிக்கை நமக்கு அழுத்தமாகவே உள்ளது!