Madras High Court : குடும்ப உழைப்பில் ஈடுபடும் சம்பளம் பெறாத பெண்களுக்கு கணவன் ஈட்டிய சொத்தில் சமபங்கு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவர் தொடுத்த வழக்கு
காலங்காலமாக வெளியில் சென்று வேலை பார்த்துவிட்டு வரும் ஆண்கள், வீட்டில் அன்றாட வேலைகளை பார்க்கும் பெண்களை இரண்டாம் பட்சமாக தான் பார்க்கின்றனர். இதனால் அவர்களுக்கு எந்த விஷயத்திலும் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. சில இடத்தில் அவர்களுக்கான சம உரிமையும் கிடைக்கப் பெறுவதில்லை. ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலைகள் அப்படி இல்லை.
ஆண்களுக்கு சமமாக அனைத்து துறைகளில் பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் சில ஊரக பகுதிகளில் பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுவதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையை பயன்படுத்தி வாங்கி சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை எனக் கூறி கணவர் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
"சொத்தில் பங்குண்டு”
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ”கணவன் சம்பாதிப்பதும், மனைவி குழந்தைகள் – குடும்பத்தை கவனிப்பதும் பொதுவானது எனவும், குடும்பத்தை மனைவி கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது என்பதால், கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் இல்லத்தரசிக்கும் சமப்பங்கு பெற உரிமை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதன் மூலம், குடும்ப மருத்துவர் போல, 24 மணி நேரமும், விடுமுறையில்லாமல் ஒரு இல்லத்தரசி மேற்கொள்ளும் பணியை, சம்பாத்தியத்திற்காக கணவன் பார்க்கும் எட்டு மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது" என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
”கணவனும், மனைவியும் இரட்டை சக்கரங்கள்"
”கணவனும், மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்கள் எனக் குறிப்பிட்ட நீதிபதி, கணவன் சம்பாத்தியம் மூலம் தன் பங்கை வழங்கினால், குடும்பத்தை கவனித்து இல்லத்தரசியாக இருக்கக்கூடிய மனைவி தன் பங்களிப்பை வழங்குவதால், சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டுள்ளார்.
குடும்பத்தை கவனித்து, நேரடியாகவோ, மறைமுகமாகவோ இல்லத்தரசிகள் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்த சட்டமும் இயற்றப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அந்த பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க
TN Rain Alert: இன்னும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. அப்போ மழை நிலவரம் எப்படி?