Russia Wagner Mercenary:  ரஷ்யாவில் ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் படை மாஸ்கோவை நோக்கி முன்னேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


தலைநகரை குறிவைக்கும் வாக்னர் குழு?


ரஷ்யாவில் ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் படை மாஸ்கோவை நோக்கி முன்னேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரோஸ்டோவ் நகரை கைப்பற்றி வாக்னர் ஆயுதக்குழு, லிப்பெட்ஸ்க் பகுதிக்குள் நுழைந்துள்ளது. குண்டுவீச்சு சத்தம் கேட்டு ரோஸ்டோவ் நகர மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு லிப்பெட்ஸ்க் பகுதியில் இருந்து 6 மணி நேரத்தில் செல்ல முடியும் என தகவல் வெளியாகி இருக்கிறது.  அந்நாட்டு ராணுவத்தின் தடுப்பு நடவடிக்கைகளை மீறி தலைநகரை நோக்கி வாக்னர் ஆயதக்குழு நுழைவதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. 


முதலாவதாக மாஸ்கோவில் உள்ள சிறையில் கலவரம் வெடித்துள்ளது.  ரோஸ்டோவை கைப்பற்றி மாஸ்கோவை நோக்கி ஆயதக்குழு முன்னேறும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாகவே சிறையில் கலவரம் வெடித்துள்ளது. வாக்னர் படை முன்னேறுவதை தடுக்க தலைநகர் நோக்கி செல்லும் வழியில் உள்ள பாலங்களை குண்டு வீசி அழித்தது ரஷ்ய ராணுவம். அங்கு பெரும் பதற்றம் நிலவுவதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மக்கள் சொன்னது என்ன?


உள்நாட்டு போரால் ரஷ்யா முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், ராஷ்டோவ் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு பேர் பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, "இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எங்களுக்கு மட்டுமின்றி இங்கு இருக்கும் பாதி மக்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஆங்காங்கே குண்டு சத்தம்  மட்டும் கேட்கிறது.  மக்கள் ஆங்காங்கே ஓடிகின்றனர். எங்களுக்கு மிகவும் பதற்றமாக இருக்கிறது” என்று தெரிவித்தனர். 






காரணம் என்ன?


கடந்த ஜனவரி மாதம், உக்ரைனில் டொனெட்ஸ்க் பகுதியில் உப்புச் சுரங்க நகரமான சோலேடரை ரஷியா கைப்பற்றியது. இந்த நகரை தாங்களே கைப்பற்றினர் என்றும் வாக்னர் குழுவின் வெற்றியை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் பறிக்க நினைப்பதாகவும் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் குற்றம்சாட்டினார்.


பாக்முட் நகரை கைப்பற்றுவதற்கு வாக்னருக்கு போதுமான வெடிமருந்துகளை வழங்க ரஷிய ராணுவம் தவறிவிட்டதாகவும், தனது ஆட்களை வெளியேற்றிவிடுவோம் என்றும்  வாக்னர் கூலிப்படை பலமுறை குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் வாக்னர் கூலிப்படையினர் என்று கூறப்படும் துருப்புக்கள் ஒரு வீடியோவை பதிவு செய்தனர். அதில், தங்களுக்கு வெடிமருந்துகளை வழங்கத் தவறியதாக ரஷிய ராணுவத்தின் ஜெனரல் ஸ்டாஃப் ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் மீது அவர்கள் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.