கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துகள் சென்னையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் அம்மருந்து விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து நேற்று முதல் கோவையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வயல் ரெம்டெசிவிர் 1568 ரூபாய்க்கும், 6 வயல் ரெம்டெசிவிர் 9704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்று, சிடி ஸ்கேன் சான்று, மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளி மற்றும் மருந்து வாங்க வருபவரின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. ரெம்டெசிவிர் விற்பனை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்குழுவினர் ஆவணங்களை பார்த்து பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே அம்மருந்து வழங்கப்படுகிறது. ரெம்டெசிவிர் விற்பனை துவங்கிய முதல் நாளில் 500 வயல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.



ஞாயிற்றுக்கிழமை நாளான இன்று ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மருந்து வாங்க வந்த பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கனுடன் வருபவர்களுக்கு நாளை மருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், “கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரொனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. அரசு உத்தரவின் பேரில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று 500 வயால் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த மருந்து தேவைப்படும். அறிகுறி இல்லாதவர்களுக்கு தேவையில்லை. விடுமுறை நாளான இன்று வந்த 63 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நாளை மருந்து விநியோகம் செய்யப்படும். நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மருந்து விநியோகம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.


நாளை முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், இன்று ரெம்டெசிவிர் விற்பனைக்கு விடுமுறை அளித்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசிய ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்த பொதுமக்கள் கூறுகையில், “அவசர அவசிய தேவை கருதி ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்தோம். ஞாயிற்றுக்கிழமை எனக்கூறி இன்று விடுமுறை அளித்துள்ளனர். இன்று டோக்கன் பெற்றுக்கொண்டு நாளை வந்து வாங்கிக் கொள்ளுமாறு சொல்கின்றனர். மதுபானக்கடைகள் விடுமுறை நாளான இன்று செயல்படுகிறது. ஆனால் உயிர்காக்கும் மருந்து விற்பனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் சென்று வாங்கவும் முடியாது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரெம்டெசிவிர் விற்பனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.