சீனாவில் உருவான HMPV வைரஸ், இந்தியாவில் 3 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் 2 குழந்தைகளுக்கும் பரவி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் இருவருக்கு HMPV வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சளி, காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 5 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று
முன்னதாக பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த இரண்டு குழந்தைகளும் எந்த வித வெளிநாட்டு பயணங்களும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அகமதாபாத்தில் உள்ள ஒரு குழந்தைக்கும் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே நாளில் 5 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறிகுறிகள் என்னென்ன?
இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை அறிகுறிகளாகக் கூறப்படுகிறது. குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அதிகம் பரவும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்துமா, சிஓபிடி எனப்படும் நுறையீரல் பாதிப்பு உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தும்மலில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுதாக கூறுகின்றனர்.
இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு முதல் 5 நாட்களில் அறிகுறிகள் தெரியும். இந்த வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் அறிகுறிகளை கட்டுப்படுத்த மட்டுமே சிகிச்சை தரப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.