தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
நடந்தது என்ன?
2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ஆர்.என்.உரையுடன் தொடங்க இருந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவை மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால், முதலில் தேசிய கீதம்தான் பாடப்பட வேண்டும், மாநில சட்டப்பேரவைகளில் அவ்வாறுதான் பாடப்படுகிறது என்று ஆளுநர் சபாநாயகரையும் முதலமைச்சரையும் வலியுறுத்தி உள்ளார். ஆனால், அது மரபு அல்ல என்றும் தேசிய கீதம் இறுதியில் இசைக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
வெளிநடப்பு செய்த ஆளுநர்:
இதனை ஏற்காத ஆளுநர் ரவி, பேரவையில் தன்னுடைய உரையையும் வாசிக்காமல் அவசர அவசரமாக பேரவையை விட்டு வெளியேறினார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ஆளுநர் மாளிகை இது குறித்து விளக்கம் அளித்து இருந்தது.
அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, “ தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதலமைச்சர் இடமும் சட்டப்பேரவை சபாநாயகரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் , அதிமுகவினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் யார் என்ற சார் என்ற பேட்சை சட்டையில் அணிந்து ,சட்டப்பேரவைக்கு வந்தனர். பின்னர் திமுக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
பாஜக அல்லாத மாநிலங்களில் , தனி ராஜாங்கம் நடத்த ஆளுநர்கள் முயற்சிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் ஏஜென்டாக , தமிழ்நாட்டின் உரிமைகளில் ஆளுநர் அத்துமீறுவதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு மீதான மக்கள் கோபத்தை திசைத்திருப்பும் பாஜக -அதிமுக கள்ளக்கூட்டணியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் என என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தரப்பு தெரிவிப்பதாவது, “தமிழ்நாட்டின் மரபுப்படி , முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அடுத்து ஆளுநர் உரை இறுதியில் தேசிய கீதம் இயற்றப்படும்; ஆனால் முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என மரபுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.