செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட திருமணி கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான எச்எல்எல் தடுப்பூசி தயாரிக்கும்  கடந்த 2012-ஆம் ஆண்டு  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு "தேசிய முக்கியத்துவ திட்டம்" என்று ஒப்புதல் அளித்தது.  நமது நாட்டின் தடுப்பூசி தேவையில் 75% எச்பிஎல் நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளப்படும் மீதமுள்ள தடுப்பூசி மருந்துகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் என ஒப்பந்தம் உள்ளது.



இதனைத் தொடர்ந்து 100 ஏக்கர் பரப்பளவில் 55,685 சதுர மீட்டர் பரப்பளவில் தடுப்பூசி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதில், தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி,  ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி. ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கும் வகையில் உள் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு அதற்கான ஆய்வு தளவாடங்கள் அனைத்தும் நிறுவப்பட்டு தடுப்பூசிகள் தயாரிக்கும் வைகையில் தயார் நிலையில் உள்ளது.இப்பணிகளில் பயோ டெக்னாலாஜி பயின்ற வல்லுநர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 



இத்திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவு ரூ.594 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் காலதாமதமானதால், 2017-ஆம் ஆண்டில் ரூ.710 கோடியாகவும், 2019-ஆம் ஆண்டில் ரூ.904.33 கோடியாக அதிகரித்தது. மீண்டும் திருத்தப்பட்ட ரூ.904.33 கோடியாகத் திட்டச் செலவு விரிவாக்க அறிக்கையை 2018ம் ஆண்டு சமர்ப்பித்தது. ஆனால், நிதி அமைச்சகம் திட்டத்தின் முன்மொழிவு சாத்தியமில்லை எனக்கூறி நிதி ஒதுக்க நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

 



 உலகத் தரம் வாய்ந்த தளவாடங்களும் வசதிகளும் உள்ளன. கடந்த ஆண்டு கொரானா உச்சத்திற்கு சென்றபோது உலகம் முழுவதும் தடுப்பூசி தயாரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அப் போது அதற்கான தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து வசதிகளும் இந்த நிறுவனத்திற்கு இருப்பதால் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்து பல போராட்டங்களை நடத்தினர். இருந்தபோதிலும் இன்றுவரை மத்திய அரசாங்கம் இந்த நிறுவனத்தில் தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அதற்கான நிதியும் ஒதுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.



இந்நிலையில் கடந்த மாதம் பொறுப்பேற்ற திமுக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்.எல்.எல் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அந்த நிறுவனத்தை நேரில் சென்று ஆய்வு செய்ததுடன்  மத்திய அரசாங்கத்திற்கும் பல கடிதங்களை எழுதி உள்ளார். மேலும் அமைச்சர்களை நேரில் அனுப்பியும் வலியுறுத்தினார். இந்த நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு விடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசாங்கம் எந்த ஒரு பதிலும் அளிக்காத நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை நேரில் அழைத்து இந்நிறுவனத்தில் தடுப்பூசிகளை தயாரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வியாழனன்று ஆலோசனை நடத்தினார்



இதனை தொடர்ந்து பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுசித்ரா, செயல் இயக்குனர் சாய் பிரசாந்த் ஆகியோர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு  செங்கல்பட்டு எச்.எல்.எல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆய்வானது  7 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது இதில் சில எந்திரங்களை அதிகாரிகள் இயக்கச் சொல்லி பார்வையிட்டுள்ளனர்.