தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் அரசு தொடர்பான அதிகாரிகள் மாற்றம் அதிரடியாக நடந்து வருகின்றன. தலைமைச் செயலாளர்  முதல் சென்னையின் ஆணையர் வரை பலர் மாறுதலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகம் கொரோனாவின் தீவிரத்தில் சிக்கியுள்ள நிலையில் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள் கொரோனாவுக்கு எதிரான போரை வேகமெடுக்கச் செய்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.




1953-இல் பிறந்த சண்முகசுந்தரத்தின் தந்தையான ராஜகோபாலும் ஒரு வழக்கறிஞர்தான். திராவிட பற்றாளரான ராஜகோபாலின் நீதிமன்ற தாக்கம் சண்முகசுந்தரத்தையும் தூண்டியது. அந்த தாக்கமே நீதித்துறையை நோக்கி ஓட வைத்தது. தந்தை ராஜகோபாலைப்போலவே சட்டம் முடித்த சண்முக சுந்தரம் அரசு வழக்கறிஞராக வளர்ந்தார். வக்கீல் சண்முகசுந்தரம். இந்த பெயர் தமிழக அரசியலில் மிக முக்கியமான பெயர். வழக்கு, தாக்குதல், போராட்டம் என சண்முகசுந்தரத்தின் நீதிமன்ற வாழ்க்கை மிகவும் பரபரப்பானவை. 1995-ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீவிரமாக இருந்தார் சண்முகசுந்தரம்.


டான்சி நிலத்தை ஜெயலலிதா வாங்கியது தொடர்பான ஆவணங்களை தனது வீட்டில் தயாரித்துக்கொண்டு இருந்தபோது அதிரடியாக அவர் வீட்டுக்குள் நுழைந்த வெல்டிங் குமார் தலைமையிலான ரவுடி கும்பல் சண்முகசுந்தரத்தை கொடூரமாக தாக்கியது. கத்தி, கம்பி என பல ஆயுதங்களால் தாக்கப்பட்ட சண்முகசுந்தரம் ரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்குப்பின்னான தீவிர சிகிச்சைக்கு பின் சண்முகசுந்தரம் உயிர் பிழைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் என்ற பல்வேறு அரசியல் தலைவர்களும் சண்முகசுந்தரத்தின் அதிரடி நடவடிக்கைகளையும், அவர் மீதான தாக்குதல் குறித்தும் குறிப்பிட்டு பேசியுள்ளனர். 




அவரின் நீதிமன்ற வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால், 1977-ஆம் ஆண்டு வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்ட சண்முகசுந்தரம்,1989- 1991 வரையிலான காலகட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் கூடுதல் வழக்கறிஞராக இருந்தார். பின்னர்தான் அவர் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி தாக்குதலுக்கு உள்ளானார். பின்னர் 1996-2001ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். இந்தக்காலக்கட்டத்தில் நூற்றுக்கணக்கான குற்ற வழக்குகள், ஆட்கொணர்வு வழக்குகளில் வாதாடி தள்ளினார் சண்முகசுந்தரம்.


2002-2008-ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய வக்கீல் சண்முகசுந்தரம்,  2015-2017-இல்  சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். ஒன்று இரண்டு அல்ல, சண்முகசுந்தரத்தின் நீதிமன்ற அனுபவம் நீளமானவை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவ தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர். மனித உரிமை மீறல் விவகாரங்களில் சண்முகசுந்தரத்தின் குரல் உயர் நீதிமன்றம் மட்டுமின்றி உச்சநீதிமன்றத்திலும் ஒலித்தது.




ஐநா சபைக்கூட்டம், சர்வதேச கருத்தரங்கு என இந்தியா சார்பில் வெளிநாடுகளுக்கு பறந்த சண்முகசுந்தரம் இந்தியாவின் குரலை தீர்க்கமாக பதிவு செய்தவர். பிரிட்டிஷ் கவுன்சில் மூலம்  பிரிட்டனில் கிரிமினல் சட்ட மேம்பாடு குறித்து பயின்றவர். நூற்றுக்கணக்கான வழக்குகள், நீண்ட சட்ட அனுபவம் என சண்முக சுந்தரத்தின் நீதிமன்ற அனுபவத்தை வைத்தே தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக அவரை நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.