தயிர் பாக்கெட்டில் தஹி என்று இந்தியில் அச்சிட மாட்டோம் என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை பால்வளத் துறை அமைச்சர் நாசர் ABP Nadu-விடம் தெரிவித்தார்.
ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் உறைகளின் மீது தயிர் என்று எழுதக்கூடாது என்றும், தாஹி என்ற இந்திச் சொல்லைத்தான் எழுத வேண்டும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
இந்தியில் பெரிய எழுத்துகளிலும் தேவையெனில் மாநில மொழிகளில் அடைப்புக் குறிக்குள்ளும் எழுதலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் மறைமுகமான இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது எனவும் அதை ஏற்க முடியாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ''இந்தியை இந்தியாகவே திணித்தால் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால், இந்தி சொற்களை தமிழில் எழுதி திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள், வானொலிகள், பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவை வழியாக இந்தியைத் திணிக்க முயன்று வரும் மத்திய அரசு, இப்போது தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் மூலமாகவே இந்தியைத் திணிக்கத் துடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
எந்த வழிகளில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயன்றாலும் அதை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆவின் தயில் பாக்கெட்டில் தாஹி என்று இந்தியில் அச்சிட முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை பால்வளத் துறை அமைச்சர் நாசர் ABP Nadu-விடம் தெரிவித்தார்.
இதுகுறித்து ABP Nadu-க்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், ’’கடந்த ஜனவரி 11ஆம் தேதி தயிர் உறைகளின் மீது தயிர் என்று எழுதக்கூடாது என்றும், தாஹி என்ற இந்திச் சொல்லைத்தான் எழுத வேண்டும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் என கடிதம் எழுதி இருந்தது. இதை ஆகஸ்ட் மாதத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
ஆனால் எங்களால் முடியாது என்று மறுத்துவிட்டோம். ஏனெனில் இந்தி வார்த்தையைச் சேர்க்கவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. திமுக என்றும் மும்மொழித் திட்டத்துக்கு உடன்படாது. நாங்கள் இருமொழிக் கொள்கைக்கு உடன்பாடு உள்ளவர்கள்.
மொழி உணர்வு
தயிர் என தமிழிலும், Curd என்று ஆங்கிலத்திலும் மட்டுமே அச்சிடுவோம் என்று தெரிவித்துவிட்டோம். ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. நமக்குத் தமிழ் மொழியின்மீது பற்றும் பாசமும் உள்ளதுபோல அவர்களுக்கும் மொழி உணர்வு உள்ளது.
இதேபோல பால் என்ற வார்த்தைக்கு தூத் என்று அச்சிட வேண்டும் என கடந்த ஆண்டு அறிவுறுத்தி இருந்தனர் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளனர். இந்தி மொழியைத் திணிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மத்திய அரசு இவ்வாறு செய்கிறது'' என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.