மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் வரும் 15ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 15ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து இந்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும் குறிப்பாக தென் மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.


இந்நிலையில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.


கடந்த மாதம், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் 11வது தொகுதியில், ஆங்கிலம் மிகவும் அவசியமான இடங்களில் மட்டுமே பயிற்றுவிக்கும் மொழியாக இருக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனங்களில் படிப்படியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


"இந்தியை பயிற்றுவிக்கும் மொழியாக பயன்படுத்த வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத நிறுவனங்களிலும் இந்தியை பயன்படுத்த வேண்டும் மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது விருப்பமாக இருக்க வேண்டும்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITகள்), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIMகள்) மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் (AIIMS) ஆகியவை மத்திய அரசின் கீழ் உள்ள சில தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களாகும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவை தொழில்நுட்பம் அல்லாத நிறுவனங்களின் பிரிவின் கீழ் வருகின்றன.


பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப அல்லது மருத்துவ நிறுவனங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கும் மொழியாக இந்தியாகாத வரை, இந்தி பொதுவான மொழியாக முடியாது என அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.


அலுவல் மொழிச் சட்டம், 1963 இன் கீழ் 1976 ஆம், இந்த குழு அமைக்கப்பட்டது. குழுவில் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மக்களவையில் இருந்து 20 பேரும், ராஜ்யசபாவில் இருந்து 10 பேரும் உள்ளனர். அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக இந்தியைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தை ஆய்வு செய்து, குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்து வருகிறது.


பயிற்சி நிறுவனங்களில் இந்தி மொழியை பயிற்றுவித்தல், ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாளை நீக்குதல், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளையும், உயர் நீதிமன்ற உத்தரவுகளையும் இந்திக்கு மொழிபெயர்ப்பதற்கான போதுமான ஏற்பாடுகளை செய்தல் ஆகியவை பரிந்துரைகளாக வழங்கப்பட்டுள்ளன.


"பல ஆட்சேர்ப்பு தேர்வுகளில், இந்தி மொழியில் எழுதுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆங்கில மொழி வினாத்தாள் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்வை எழுதுபவர் இந்தியை விட ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். எனவே, கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்தி விருப்பங்கள் வழங்கப்பட வேண்டும்.


பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு தேவையான இந்தி அறிவை உறுதி செய்ய வேண்டும். ஆட்சேர்ப்புத் தேர்வுகளில், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி வினாத்தாள் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும்.


சில அலுவலர்கள் அல்லது பணியாளர்கள் இந்தியில் பணிபுரிவதில்லை என்று குழு கண்டறிந்துள்ளது. எனவே, அந்த அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும். திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றால், அது அவர்களின் வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையில் பதிவு செய்யப்பட வேண்டும்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.