நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலையால் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் தினசரி பாதிப்பு 25 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வருகிறது. கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் 450-க்கும் அதிகமாகவே சில தினங்களாக பதிவாகி வருகிறது.


கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி அனைவரும் செலுத்திக்கொள்ளவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேசமயத்தில், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி ஆலையில் தடுப்பூசி தயாரிப்பை தொடங்கவேண்டும் என்றும், தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் பல தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.




இந்த சூழலில், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை உடனே தொடங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வெர்னிகாமேரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த சூழலில், நீதிமன்றம் இதுதொடர்பாக உத்தரவிட வேண்டும் என்று கோரமுடியாது என்றனர்.




செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்பாடு தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டாமா? மாநில அரசின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு அவகாசம் வழங்க வேண்டாமா? என்று மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுமட்டுமின்றி, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை மீண்டும் மத்திய அரசுக்கு செயல்பாட்டுக்கு கொண்டு வரும் என்று நீதிமன்றம் நம்புவதாக மத்திய அரசு மீது நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இதனால், இதுதொடர்பாக எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.


செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். தடுப்பூசி ஆலையில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் எம்.பி.க்கு பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மத்திய அமைச்சர்களிடம் செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வலியுறுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : 11-ஆம் தேதிக்குள் ஆஜராக சிவசங்கர் பாபாவுக்கு சம்மன்