அவதூறு வீடியோ குறித்து புகார் அளித்தப்பின்னும் அந்த வீடியோவை நீக்காவிட்டால் யூடியூப்பும் குற்றவாளிதான் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. 


யூடியூப்..


முதல்வர் முக ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜாமினை தடை செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், யூடியூப் குறித்து சில கருத்துகளையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதில், ''அவதூறு வீடியோ குறித்து புகார் அளித்தப்பின்னும் அந்த வீடியோவை நீக்காவிட்டால் யூடியூப்பும் குற்றவாளிதான். அவதூறு வீடியோவை நீக்குங்கள் எனக்கூறினால், முதல் தகவல் அறிக்கையை (FIR) யூடியூப் கேட்கிறது. இந்த வழக்கம் தறானது. விதிகளை மீறினால், அது கவனத்தில் கொண்டு செல்லும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வீடியோவை உடனடியாக நீக்கவும், சேனலை முடக்கவும் யூடியூப் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது




கடந்து வந்த பாதை..


சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணை செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.


இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி  தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசி வருகிறார். இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.



 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி,  ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூபும் குற்றவாளிதான். ஆகவே யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ன திட்டம் உள்ளது? என்பது குறித்து தமிழக அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் ராமகிருஷ்ணனை நியமித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அது தொடர்பான விதிகள், சமீபத்திய சட்டத்திருத்தங்கள் மற்றும் முழு விபரங்களைத் தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டுமென கோரினார். அதனைத் தொடர்ந்தும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது.