நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


உயர்நீதீமன்றம் தொடர்பாக அவதூறாகப் பேசியதாக  பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச் ராஜா மீதான வழக்கு வருகின்ற 23 ஜூலை அன்று திருமயம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாகத் தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஹெச்.ராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு கடந்த 14ஆம் தேதி விசாரணைக்கு வரவிருந்த நிலையில் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி அறிவித்தார். அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தந்தைப் பெரியார் திராவிடர் கழகமும் இந்த வழக்கில் தங்களை எதிர்மனுதாரராக இணைத்துக்கொள்ளச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளது.   


இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. மேலும், சம்பந்தப்பட்ட நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசியுள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு ஆஜராக ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.





வழக்கின் பின்னனி என்ன? 


புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 2018-ல் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் மேடை அமைக்க போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கும் ஹெச்.ராஜா தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்ததலைவரான ஹெச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாகப் பேசினார். 
அதனால் நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாகப் பேசியது உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. இது தொடர்பாக முதலில் தான் பேசியது எடிட் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்த ஹெச்.ராஜா பின்னர் தான் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டதாக மன்னிப்பு கேட்டார். அதன்பின்னர் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஹெச்.ராஜா தலைமறைவாக இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். 


முன்னதாக  ஹெச்.ராஜா மீது அண்மையில் காரைக்குடி பாரதிய ஜனதா கட்சியினர் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் தோல்வியை தழுவியிருந்தார். தனது தேர்தல் தோல்விக்கு சிவகங்கை மாவட்ட மற்றும் காரைக்குடி நகர பாஜக நிர்வாகிகள் முறையாக கட்சிப்பணி ஆற்றாததே காரணம் என கட்சி மேலிடத்திற்கு எச்.ராஜா புகார் அளித்திருந்த நிலையில், அதனை முற்றிலும் மறுத்திருந்த பாஜக மாவட்ட நிர்வாகிகள், கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் எச்.ராஜாவிற்கு காரைக்குடி நகரப்பகுதியில் 8000 வாக்குகளை அதிமாக பெற்றுத் தந்ததாக காரைக்குடி நகர செயலாளர் சந்திரன் கூறியிருந்தார். தான் இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று முன்கூட்டியே எச்.ராஜாவிற்கு தெரிந்ததால் கட்சி மேலிடம் தேர்தல் செலவிற்காக கொடுத்த எல்லா நிதியையும் அவரே வைத்துக் கொண்டதாக குற்றம்சாட்டியதுடன் தற்போது காரைக்குடியிலேயே எச்.ராஜா 4 கோடியில் வீடு கட்டி வருவதாகவும் பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். எச்.ராஜாவின் மருமகன் சூரிய நாராயணன் தரப்பில் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் ராஜினாமா செய்த நிர்வாகிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.குற்றம்சாட்டியவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த வழக்கின் விசாரணை திருமயம் நீதிமன்றத்தில் வருகின்ற ஜூலை 23ல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தனக்கு முன் ஜாமீன்கோரி  உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகள் அத்தனையும் தான் பின்பற்றத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.


H raja BJP : 4 கோடி வீடு - மழுப்பிய ஹெச்.ராஜா..