நாட்டின் மரபுச் சின்னங்களையும், பெயர்களையும் முறையற்ற வகையில் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மறைந்த காங்கிரஸ் அரசியல்வாதியுமான அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தடுப்பதற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை என பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கிட்டத்தட்ட வழக்குத் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேல் நிறைவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தார். முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டு வரும் தேசியக்கொடி, தேசிய, மாநில சின்னங்கள், முத்திரைகள் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமெனவும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் விரிவான விளம்பரம் செய்ய வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். மேலும், உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவின் கொடி விதிமுறை, 2002” “தேசிய கவுரவத்திற்கு அவமதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம், 1971” ஆகியவற்றில் உள்ள விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுமாறு அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் / அதிகாரிகள், யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகள், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் / துறைகளின் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் விரிவான பிரச்சாரமும் விளம்பரமும் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Breaking Live: கடந்த 24 மணி நேரத்தில் 90, 928 பேருக்கு கொரோனா தொற்று - கடந்த வாரத்தை விட 591% அதிகம்