பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் ஹீராபென் (100) இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஹீராபென் இன்று (டிச.30) அதிகாலை உயிரிழந்தார்.


இந்நிலையில் தாயை இழந்து வாடும் பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  தமிழ்நாடு ஆளுநர் அலுவலகமான ராஜ் பவன் தரப்பில் இரங்கல்  தெரிவித்துள்ளது.






தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ள பதிவில், "தாயே, நாளை காலை கதிரவனும் இவ்வாறே உதிப்பானா?


தாயே சொல், உணர்வுகள் அத்தனையும் இழந்து சூனியமாய் கிடக்கிறேன்...


'இடிந்தன கனவுகள்’ என்ற தலைப்பில் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கவிதை.


அன்னையின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பால், அவரை இதயத்தில் வைத்து பூஜித்த பெருமகன் நம் பிரதமர். வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருந்த நம் பாரதப் பிரதமரின் அன்னையின் மறைவு செய்தி, இதயத்தில் பேரிடியாக இறங்கியது.


அன்னையை ஆன்ம தத்துவமாக வழிபட்ட நம் பிரதமருக்கு காலம் ஆறுதல் கூறட்டும்... மறைந்த அன்னையின் ஆன்மா இறை நிழலில் அமைதியாக இளைப்பாறட்டும்... தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


 






தெலங்கானாவுக்கு ஆளுநர், மற்றும் புதுவை துணை நிலை ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 


மழலையாய் பிறந்த மகனை... பிறர் மலைப்புற வளர்த்து... உறுதியான மலை என பொது வாழ்க்கையில் உயரச் செய்து... உலகிலேயே உயர்ந்த மனிதராய் உயர்த்தி தன் தள்ளாத வயதிலும்... தளர்வில்லா வலிமையை... உலகின் வலிய தலைவராம்...நம் பிரதமருக்கு...


தற்போது மட்டுமல்ல பிறந்ததிலிருந்து... அளித்துவந்த அன்னை தீபம் அணைந்து விட்டது எங்கள் பிரதமரின் அன்பு வெள்ளம் மறைந்ததைக் கேட்டு எங்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம் எதையும் தாங்கும் எப்போதும் உள்ள உறுதியை இப்போதும் நம் இறைவன் நம் பிரதமருக்கு அருளட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


 






பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் அம்மையார் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். நரேந்திர மோடி அவர்களின் வாழ்வில் அவரது தாயார் எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை நான் அறிவேன். தாயை இழந்து வாடும் பிரதமருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.


ஹீரா பென்னின் இறுதி ஊர்வலம் குஜராத் காந்தி நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. குஜராத், காந்தி நகரில் உள்ள ஹீராபென்னின் உடலுக்கு மலர் வளையம் வைத்தும், அவரது உடலை சுமந்து சென்றும் பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்.


 






மேலும் பிரதமரின் தாயாருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குஜராத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.  அதேபோல் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் குஜராத் செல்கிறார்.