மதுரை விமான நிலையம் மூலமாக விமான பயணம் மேற்கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சித்தார்த்தின் பெற்றோர் வந்த போது அவர்கள் கொண்டு வந்த உடமையை மதுரை விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்கள் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீரர்கள் இந்தியில் கூறவே இந்தி தெரியாது என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு வீரர்கள் ஆங்கிலம் பேச மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் கூட்டம் இல்லாத நேரத்திலும் 20 நிமிடங்கள் காக்க வைத்து துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்தப்பிரச்னை குறித்து பல்வேறு தரப்பினரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நடிகர் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சோதனையின் பேரில் 20 நிமிடம் நிற்க வைத்து ஹிந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தி துன்புறுத்தியதாக விளம்பர நோக்கத்தோடு தமிழகத்தில் மொழி பிரச்னையை தூண்டும் விதமாகவும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பணிகளை களங்கப்படுத்தும் விதமாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே திட்டமிட்டு இணையதளத்தில் நடிகர் சித்தார்த் வெளியிட்டதாகவும், இவர்களை விமானநிலையத்தில் சோதனையிடக்கூடாதா எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்த பெண் தான் சோதனை நடத்தியதாகவும், அவரிடம் சித்தார்த் குடும்பத்தினர் தான் இந்தியில் பேச கட்டாயப்படுத்தியதாகவும் புகார் தெரிவித்தனர். சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்துமக்கள்கட்சி தலைவர் சோலைக்கண்ணன் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்