மதுரை - போடிநாயக்கனூர் 90 கிமீ தூர அகல ரயில் பாதை திட்டம் ரூபாய் 592 கோடி செலவில் நிறைவேறியுள்ளது. தேனி - போடிநாயக்கனூர் இடையே 15 கிமீ அகல ரயில் பாதை பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த புதிய ரயில் பாதை பிரிவில் 8 பெரிய பாலங்கள் மற்றும் 184 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு நடைபெற்றது.
பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் தேனி ரயில் நிலையத்திலிருந்து மோட்டார் டிராலி மூலம் ஆய்வை துவக்கினார். முன்னதாக தேனி ரயில் நிலையத்தில் தேனி போடி இடையே ரயில் இயக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள பிளாக் இன்ஸ்ட்ருமென்ட், கணிப்பொறித் திரை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்பு தேனி அருகே உள்ள வாழையாறு ஆற்றுப்பாலம், கோட்டகுடி மற்றும் கோட்டகுடி கிளை ஆற்று பாலங்கள், பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி சாலை கீழ் பாலங்கள், ரயில் பாதை வளைவுகள், மின்தட குறுக்கீடுகள், நீர்வழி கீழ் பாலங்கள், போடிநாயக்கனூர் - புதூர் ரயில்வே கேட் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அவருடன் இந்த ஆய்வில் தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி வி. கே. குப்தா, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதன்மை பொறியாளர் மஸ்தான் ராவ், முதன்மை கட்டுமான பொறியாளர் இளம் பூரணன், முதன்மை தொலைதொடர்பு பொறியாளர் பாஸ்கர் ராவ், முதன்மை மின் பொறியாளர் பாலாஜி, துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் அதிவேக சோதனை ஓட்ட ஆய்வு ரயில் போடிநாயக்கனூரில் இருந்து மூன்று ரயில் பெட்டிகளுடன் மாலை 03.27 மணிக்கு புறப்பட்டு மாலை 03.36 மணிக்கு 9 நிமிடங்களில் தேனி வந்து சேர்ந்தது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்